UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 12:16 PM
சென்னை:
ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.சென்னையில் அஜித் கிருஷ்ணன் 1982ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி பிறந்தார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்றவர். அவர் விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றைப் பெற்றவர்.அஜித் கிருஷ்ணன், 2023 ஜூன் 21ல், இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். இவர் பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும், இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கான டெஸ்ட் பைலட்டாகவும் உள்ளார்.அஜித் கிருஷ்ணனுக்கு 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. அவர் சூ-30 எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாக்குவார், டோர்னியர், An-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை ஓட்டிய அனுபவம் உள்ளது. அவர் வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்.