இளம் வாக்காளர்களை ஊக்குவிக்க கல்லூரிகளில் பிரசாரம் துவக்கம்!
இளம் வாக்காளர்களை ஊக்குவிக்க கல்லூரிகளில் பிரசாரம் துவக்கம்!
UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 01:17 PM
புதுடில்லி:
லோக்சபா தேர்தலில் முதன்முறை வாக்காளர்கள் தவறாமல் ஓட்டளிப்பதை ஊக்குவிப்பதற்காக, தேசிய அளவிலான பிரசாரத்தை மத்திய அரசு நேற்று துவக்கி உள்ளது. இந்த பிரசாரம், இன்று துவங்கி மார்ச் 6 வரை நடக்கிறது.லோக்சபா தேர்தல், வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கவுள்ளது. இதில், 18 - 19 வயது வரையிலான 1.85 கோடி புதிய வாக்காளர்கள் முதன்முறை ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.இவர்களிடம் ஓட்டளிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பிரசாரத்தை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக, நாட்டிற்கான என் முதல் ஓட்டு என்ற பிரசாரத்தை மத்திய அரசு நேற்று துவங்கியது.விழிப்புணர்வு
தேர்தலில் இளம் வாக்காளர்கள் தவறாமல் ஓட்டளிப்பதை ஊக்குவிப்பதும், அவர்களின் ஒவ்வொரு ஓட்டும் இந்த தேசத்தின் நன்மைக்காக என்ற கருத்தை அவர்கள் மனதில் ஆழமாக பதிய வைப்பதுமே, இந்த பிரசாரத்தின் நோக்கமாக வரையறுக்கப்பட்டுஉள்ளது.இதற்காக பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் முதன்முறை வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.ப்ளாக் ரைட்டிங் எனப்படும், வலைப்பதிவு கட்டுரைகள், பாட்காஸ்ட் எனப்படும், ஆன்லைன் ஒலிப்பதிவுகள், விவாதங்கள், கட்டுரை போட்டி, வினாடி வினா, பேச்சுப் போட்டிகள் உள்ளிட்டவை வாயிலாக மாணவர்களின் கற்பனை திறன்களை வெளிக்கொண்டு வந்து, அதன் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதோடு, ஓட்டளிப்பதின் மதிப்பை வலியுறுத்துவது, தேர்தல் நடைமுறைகளை புரிந்து கொள்வது போன்றவற்றுக்காக கல்வி நிறுவனங்களுக்கு உள்ளேயே பட்டறை வகுப்புகள் மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.கல்வி நிறுவனங்களை சேர்ந்த தேசிய நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் இந்த பிரசார பணியை முன்னெடுப்பர். இது தொடர்பான தகவல்கள், www.mygov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.அழைப்பு
இந்த பிரசாரத்துக்காக எழுதி, இசை அமைக்கப்பட்டுள்ள, 'ஓட்டளிக்கும் போது தான், நாடு மேன்மை அடையும்...' என துவங்கும் பாடலை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் வெளியிட்டனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:
நாட்டின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவுக்கு இந்த தேசமே தயாராகி வருகிறது. இந்த நேரத்தில், நாட்டிற்கான என் முதல் ஓட்டு என்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் அனைவரும் பங்கேற்று இளம் தலைமுறை வாக்காளர்கள் ஓட்டளிக்க ஊக்குவிக்க வேண்டும்.நாட்டில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும், இன்று முதல் மார்ச் 6 வரை இந்த பிரசாரத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், நம் தேர்தல் நடைமுறையை கூடுதல் பங்கேற்பு உடையதாக மாற்றுவோம். முதன்முறை வாக்காளர்கள் மத்தியில் இந்த செய்தியை பரப்ப அனைத்து தரப்பு மக்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

