பாம்பே ஜெயஸ்ரீ உட்பட 98 பேருக்கு சங்கீத நாடக அகாடமி விருது
பாம்பே ஜெயஸ்ரீ உட்பட 98 பேருக்கு சங்கீத நாடக அகாடமி விருது
UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 10:26 PM
புதுடில்லி:
பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, மிருதங்கம் இசைக் கலைஞர் நெய்வேலி நாராயணன் உட்பட 98 பேருக்கு 2022 - 23ம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆண்டுதோறும், இசை, நடனம், நாடகம், பாரம்பரிய கலைகள் மற்றும் பொம்மலாட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாடமி விருதுகள் வழங்கப்படும். 2022 - 23ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.இதில், நாட்டுப்புற கலைஞர் விநாயக் கேதேகர், வீணை கலைஞர் விஸ்வேஷ்வரன் உட்பட ஆறு பேருக்கு மிக உயரிய அங்கீகாரமான, பெலோஷிப் எனும் அகாடமி ரத்னா அறிவிக்கப்பட்டு உள்ளது.இவர்களை தவிர இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக, சங்கீத அகாடமி புரஸ்கார் விருது, 92 கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் இசைப் பிரிவில் பாம்பே ஜெயஸ்ரீ, நெய்வேலி நாராயணன் மற்றும் பாரம்பரிய கலைகள் பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்ப கலைஞர் பழனிவேல் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.பெலோஷிப் எனும் அகாடமி ரத்னா விருதுக்கு தேர்வானவர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, அகாடமி புரஸ்கார் விருதுக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் தாமிரப் பட்டயமும் வழங்கப்படும்.

