UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 09:37 AM
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுதும், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் இன்று துவங்கி, 22ம் தேதி நிறைவு பெறுகின்றன. பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4ம் தேதி துவங்கி, 25ம் தேதி நிறைவு பெறுகின்றன. 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 26ம் தேதி துவங்கி, ஏப்ரல் 8ம் தேதி நிறைவு பெறுகின்றன.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என, மொத்தம், 106 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இன்று துவங்கும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கு, 54 தேர்வு மையங்களில், 5,750 மாணவர், 6,791 மாணவியர் என மொத்தம், 12,541 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர்.அதேபோல், 184 பள்ளிகளைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவ -- மாணவியர் இந்தாண்டு அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பு தேர்வுகளுக்கு தலா 54 மையங்களிலும், 10ம் வகுப்பு தேர்வுக்கு 66 மையங்கள் என, 120 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன. இதில், 42,585 மாணவ, மாணவியர் பிளஸ் 2, பிளஸ் 1, மற்றும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் எழுத உள்ளனர்.

