புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்க புத்தக திருவிழாவில் சலுகை திட்டம்
புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்க புத்தக திருவிழாவில் சலுகை திட்டம்
UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 09:36 AM
தேனி:
தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா பழனிசெட்டிபட்டியில் மார்ச் 3 முதல் மார்ச் 10 வரை நடைபெற உள்ளது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.200 மதிப்பில் புத்தங்கள் வாங்குவதற்கு கூப்பன் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் சார்பில் 2ம் ஆண்டு புத்தகத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கலெக்டர் ஷஜீவனா தலைமையில், புத்தகத்திருவிழா முன்னேற்பாடுகள் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். புத்தகத்திருவிழாவில் பங்கேற்க உள்ள இலக்கியவாதிகள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு மாணவருக்கு ரூ.200 மதிப்பிலான கூப்பன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் வாங்கும் மாணவர்கள் கூப்பனை வழங்கி ரூ.200 சலுகை பெறலாம்.இந்த கூப்பன்கள் 6ம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதா அல்லது முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதா என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த கூப்பனை பயன்படுத்தி ரூ.200 மதிப்புள்ள புத்தகங்களை மாணவர்கள் வாங்கி கொள்ளலாம். புத்தகத்திருவிழாவில் 50 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.அதில் 40 அரங்குகளில் புத்தக விற்பனைக்கும், 10 அரசுத்துறைகளுக்கும் வழங்கப்பட உள்ளன.

