சென்னை பல்கலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
சென்னை பல்கலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 02, 2024 09:10 AM
சென்னை:
வங்கிக் கணக்கு முடக்கம் நீக்கப்பட்டதை அடுத்து, சென்னை பல்கலை ஆசிரியர், பணியாளர் வேலை நிறுத்தம், ஒரே நாளில் வாபஸ் பெறப்பட்டது.சென்னை பல்கலையின் நிதி மேலாண்மை தொடர்பாக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தணிக்கைத்துறை ஆட்சேபனைகள் உள்ளன. இதனால், பல்கலையின் நிதியை செலவிடுவதில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பல்கலைக்கு மானியம் வழங்குவதையும், அரசு பெருமளவு குறைத்துவிட்டது.இதற்கிடையில், சென்னை பல்கலையில, ஒன்பது ஆண்டுகளாக வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, பல்கலையின் வங்கி கணக்குகளின் செயல்பாட்டை, வருமான வரித்துறை, இரண்டு வாரங்களுக்கு முன் முடக்கியது.இதனால், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல், சென்னை பல்கலை நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. பல்கலையின் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால், இந்த நிர்வாக பிரச்னைகளை தீர்ப்பதில் தாமதம் ஏற்பட்டது.இதனால் அதிருப்தியடைந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், நேற்று முன்தினம் திடீரென காலவரையற்ற போராட்டம் அறிவித்தனர். அமைச்சர் கண்ணப்பன் உத்தரவின்படி, உயர் கல்வித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, வருமான வரித்துறை முடக்கிய பல்கலையின் வங்கிக் கணக்குகள், நேற்று மதியம் விடுவிக்கப்பட்டன.இதனால், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, ஜனவரி மாத சம்பளம் வழங்குவதற்கு தடையில்லை என, போராட்டக்காரர்களிடம் பல்கலை பதிவாளர் ஏழுமலை தெரிவித்தார்.தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாகவும், பல்கலைக்கான அரசின் மானியம் வழங்குவது குறித்து, வரும், 4ம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

