UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 02, 2024 09:21 AM
மதுரை:
மதுரையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு பணிகளில் அறைக் கண்காணிப்பாளராக அதிக எண்ணிக்கையில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட நோடல் அதிகாரியான தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன் அதிர்ச்சி அடைந்தார். தேர்வு பணிகளில் பங்கேற்காத அரசு பள்ளி ஆசிரியர் விவரப் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டார்.மாவட்டத்தில் பொதுத் தேர்வுப் பணிகள் ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்தது. தேர்வுக்கு முதல் நாள் வரை மையங்களுக்கான ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஒருவருக்கு இரண்டு, மூன்று மையங்களுக்கான உத்தரவுகள், ஆசிரியர் வசிக்கும் இடத்தில் இருந்து தொலைதுார பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடு, குறிப்பிட்ட சங்கத்திற்கு பணி ஒதுக்கீட்டில் சலுகை உள்ளிட்ட புகார்கள் எழுந்தன.இந்நிலையில் நாகராஜமுருகன் தலைமையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான தேர்வுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்தது. சி.இ.ஓ., கார்த்திகா முன்னிலை வகித்தார். டி.இ.ஓ.,க்கள், கண்காணிப்பாளர்கள், டி.இ.ஓ., சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள், தேர்வுப் பணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.இதில் இயக்குநர் பேசியதாவது:
அறைக் கண்காணிப்பாளர் பணிகளில் அதிக எண்ணிக்கையில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களே உள்ளனர். அரசு ஆசிரியர்களை ஏன் நியமிக்கவில்லை. ஏராளமான அரசு ஆசிரியர்கள் தேர்வுப் பணியை புறக்கணிக்கும் நோக்கத்தில் மருத்துவச் சான்று வழங்கி விலக்கு பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மெட்ரிக் பள்ளி தேர்வு மையங்களில் அரசு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆனால் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களையே அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏதாவது முறைகேடு நடந்தால் அவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது. பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு, மெட்ரிக் பள்ளிகளின் முழு விவரம், பணிக்கு வராத அரசு ஆசிரியர்கள் விவரங்களை மாவட்ட கல்வி அதிகாரிகள் இன்று (மார்ச் 2) சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

