தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆசிரியரிடம் விசாரணை
தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆசிரியரிடம் விசாரணை
UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 02, 2024 09:30 AM
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த கடலுார் ஆசிரியரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, கிண்டி அடுத்த ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கும், தனியார் டிவி நிறுவனத்திற்கு, நேற்று மொபைல் போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அப்போது அவர், தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம்; சிறிது நேரத்தில் அது வெடிக்கும் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.அதிர்ச்சி அடைந்த டிவி நிறுவன ஊழியர்கள், இது குறித்து, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள், நவீன கருவிகளால், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறைகள், சட்டசபை அரங்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.இரண்டு மணி நேர சோதனையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின், மிரட்டல் என்பது வெறும் வதந்தி என தெரிந்தது. அதேநேரம், கோட்டை போலீசார், குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணை வைத்து விசாரித்தனர்.அதில், கடலுாரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மிரட்டல் விடுத்ததும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.தொடரும் பீதி
கடந்த மாதமும், இதேபோல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 13 தனியார் பள்ளிகளுக்கு, இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். விசாரணையில், வெளிநாட்டில் இருந்து இ- மெயில் வந்தது தெரிய வந்தது. இதில் தொடர்புடையவர்கள், யார் என்பதே இன்னும் கண்டறியப்படாத நிலையில், மீண்டும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது பெற்றோரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.தனியார் பள்ளிக்கு வந்த மர்ம இ - மெயில்
குன்றத்துார் அருகே கெருகம்பாக்கத்தில், பி.எஸ்.பி.பி., என்ற பெயரில் சி.பி.எஸ்.இ., பள்ளி இயங்குகிறது. பள்ளி அலுவலகத்திற்கு நேற்று இ- மெயில் ஒன்று வந்தது. அதில், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது வெடிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு, விரைந்த போலீசார், மாணவர்களை திறந்தவெளி இடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பினர். மேலும், ஆவடியில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம், வாகனங்களைச் சோதனை செய்தனர்.நீண்டநேர சோதனைக்கு பின் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர், மாணவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

