UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 02, 2024 05:10 PM
மேட்டுப்பாளையம்:
வள்ளுவர் பள்ளிக்கு அருகில் உள்ள இடத்தை, வார சந்தைக்கு வழங்காமல், பள்ளிக்கு வழங்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
உமா மகேஸ்வரி (தி.மு.க.): வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளி, இடநெருக்கடியில் இயங்கி வருகிறது; இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும்.நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின்:
பள்ளிக்கு முன் நீதிபதி குடியிருப்பு உள்ளது. அந்த கட்டடம் மோசமான நிலையில் உள்ளது. அதை இடித்துவிட்டு, நீதிபதி குடியிருப்பை, மேட்டுப்பாளையம் நீதிமன்றம் வளாகத்தில் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதிபதி குடியிருப்பு பகுதியை பள்ளிக்கு கேட்டுள்ளோம். இதுகுறித்து, நீலகிரி எம்.பி., ராஜாவிடமும், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.முகமது சலீம் (அ.தி.மு.க.,)வள்ளுவர் பள்ளிக்கு அருகில் உள்ள இடத்தை வார சந்தைக்கு வழங்காமல், பள்ளிக்கு வழங்க வேண்டும்.தனசேகரன் (அ.தி.மு.க.,)- அந்த இடத்தை பள்ளிக்கு கொடுங்கள். பள்ளிக்கு தான் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.விஜயலட்சுமி அ.தி.மு.க.,)ஏ.டி., காலனியில் உள்ள பொதுக்கழிப்பிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. செப்டிக் டேங்க் நிறைந்து வழிகிறது. அதை சுத்தம் செய்து தர வேண்டும். நகராட்சியில் இருந்து பிளிச்சிங் பவுடர் போடுவதே இல்லை. கொசு மருந்து அடிப்பதே இல்லை. பிளிச்சிங் பவுடர் கேட்டால் இல்லை என்பதே அதிகாரிகளின் பதில்.நகராட்சி கமிஷனர் அமுதா:
பிளிச்சிங் பவுடர் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. ஏ.டி.காலனி செப்டிக் டேங் சுத்தம் செய்து தரப்படும்.சுனில்குமார் (அ.தி.மு.க.,) சாலையில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள் பிடிக்கப்படும் என, நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரருக்கு எவ்வுளவு நிதி ஒதுக்கப்படுகிறது. தெரு நாய்கள் தொல்லை உள்ளது. நாய்களை பிடிக்க அறிவிப்பு இல்லை. தெருநாய்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கோவில் மாடுகளை பிடித்தால் யாருக்கு அபராதம் போடுவீர்கள்.சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன்:
மாடுகள் பிடித்தால் ஆய்வு செய்துவிட்டு ஒப்பந்ததாரருக்கு அதற்கான கட்டணம் வழங்கப்படும். பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். முதல் தடவை ரூ.1,000 அபராத கட்டணம். கன்றுக்குட்டி இருந்தால் ரூ.500 அபராத கட்டணம். இரண்டாம் முறை என்றால் ரூ.2,000 கட்டணம். மாதம் ஒருமுறை கொசு மருந்து அடிக்கப்படுகிறது.விஜயகாண்டீபன் (தி.மு.க.,) துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. பணியாளர்கள் சிலர், துாய்மை பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளனர். அவர்களிடம் கேட்டால், அடுத்த நாள் விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர். அறிவிப்புகள் கொடுக்காமலேயே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.நவீன் (தி.மு.க.,) குப்பையை பாதி மட்டுமே எடுத்து செல்கின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, முறையான பயிற்சி அளிக்கவேண்டும். அவர்களுக்கு சரியான பயிற்சி இல்லாததால், பாதாள சாக்கடைக்கான பைப் அமைக்கும் போது, அதில் தடுமாற்றம் உள்ளது.கூட்டத்தில், 22 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் கட்ட மீண்டும் டெண்டர் விட வேண்டும் என கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்டதால், அந்த தீர்மானம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.உள்ளிருப்பு போராட்டம்
வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளிக்கு, அருகில் வாரசந்தைக்கு ஒத்துக்கப்பட்ட இடத்தை நகராட்சி நிர்வாகம் வார சந்தைக்கு ஒதுக்காமல், பள்ளிக்கு ஒதுக்க வேண்டும் என கூறி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முகமது சலீம், தனசேகரன், சுனில்குமார், குருபிரசாத், மீரான் மொய்தீன், ராஜேஸ், விஜயலட்சுமி, மருதாசலம் என 8 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

