UPDATED : மார் 03, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 08:32 AM
கதக்:
கதக்கில் குறைந்த காலத்தில் கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப, தர்பூசணி பயிரிட்டு நல்ல மகசூல் பெறும் இஸ்ரேலிய தொழில்நுட்பத்தை லட்சுமேஸ்வரை சேர்ந்த விவசாயி செயல்படுத்தி, ஏக்கருக்கு 25 டன் அறுவடை செய்து சாதனை படைத்துள்ளார்.கதக் மாவட்டம், லட்சுமேஸ்வர் அருகில் உள்ள மஞ்சளபுராவைச் சேர்ந்தவர் விவசாயி பாஷா சாப் நீரலாகி, 45. உல்லட்டி கிராமத்தில் 8 ஏக்கரில் தர்பூசணி பயிரிட்டுள்ளார்.தர்பூசணி சாகுபடி குறித்து அவர் கூறியதாவது:
பலரை போன்று ஆரம்பத்தில் வேறு பயிர்களை விளைவித்து வந்தேன். ஆனால், தர்பூசணி பயிரில் விவசாயிகள் அதிக லாபம் ஈட்டியதை கேள்விப்பட்டேன். அதன் பின்னரே தர்பூசணி பயிரிட முடிவு செய்தேன்.இது தொடர்பாக மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் உதவி கேட்டேன். அவர்களும், இஸ்ரேலிய மாதிரியில் தர்பூசணி பயிரிடுவது குறித்து விளக்கி, உதவியும் செய்தனர்.சொட்டுநீர் குழாய்
தர்பூசணி செடிகளை நடுவதற்கு முன்பு, நிலத்தை சுத்தம் செய்து, வயல் முழுதும் சொட்டுநீர் குழாய் பதிக்க வேண்டும். பின் மண்மேடு அமைத்து, அதை பிளாஸ்டிக் கவரால் மூட வேண்டும்.பெலகாவி மாவட்டம், கோகாக் தாலுகாவில் இருந்து ஒரு கன்று இரண்டரை ரூபாய்க்கு வாங்கி வந்து, இரண்டு அடி இடைவெளி விட்டு, நடவு செய்தேன். நடவுக்கு பின் குறைந்த அளவு ரசாயன உரம் போடப்பட்டது. சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சினால், 20 நாட்களில் செடிகள் நன்றாக வளர்ந்து, கொடிகளில் காய்க்க ஆரம்பிக்கும்.குறைந்த அளவு தண்ணீர் பயன்படுத்தி பயிர் வளர, சொட்டுநீர்ப் பாசன முறை ஏற்றது. இதற்காக தோட்டக்கலை துறை அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில், வயலில் சொட்டுநீர்ப் பாசன அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தண்ணீரை பயன்படுத்தி வருகிறேன்.செலவு
உழுதல், பிளாஸ்டிக் கவரிங், சொட்டு நீர் குழாய், மரக்கன்றுகள் கொள்முதல், நடவு உட்பட ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வீதம், 4.80 லட்ச ரூபாய் வரை செலவழித்து உள்ளேன். தர்பூசணி குறுகிய கால பயிராகும். 50 - 60 நாட்களில் விவசாயிகள் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 20 - 25 டன் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.நான் வளர்க்கும் மெலடி இனம் தர்பூசணி, சந்தையில் ஒரு கிலோ 16 ரூபாய்க்கு கிடைக்கிறது. விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தற்போது எங்கள் தோட்டத்தில் உள்ள தர்பூசணி கொடி நன்றாக வளர்ந்து விளைச்சல் கொடுத்துள்ளது. அறுவடைக்கு நாள் பார்த்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

