UPDATED : மார் 03, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 08:34 AM
திருவனந்தபுரம்:
கேரளாவில் கால்நடை மருத்துவ பல்கலை மாணவரை, ஆளுங்கட்சி மாணவர் அமைப்பினர், உணவு கொடுக்காமல் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடூரமாக ராகிங் செய்ததால், அவர் தற்கொலை செய்ததாக தகவல் வெளியானது.இதையடுத்து, இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி, அந்த பல்கலை துணைவேந்தர், மாநில கவர்னரால் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இளங்கலை பாடப்பிரிவு
கேரளாவின் வயநாட்டில் உள்ள பூக்கோட்டில் கால்நடை மருத்துவ பல்கலை செயல்பட்டு வருகிறது.இங்கு கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலை பாடப்பிரிவில், சித்தார்த்தன், 20, என்பவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த மாதம் 18ம் தேதி, பல்கலை விடுதி குளியல் அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் இவரின் உடல் மீட்கப்பட்டது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ.,யைச் சேர்ந்தவர்களால், அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உடற்கூராய்வு அறிக்கையில், மாணவர் உடலில் காயங்கள் இருந்ததும், இரண்டு நாட்களாக எந்த உணவும் கொடுக்காமல், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் துன்புறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, அதே பல்கலையைச் சேர்ந்த 18 மாணவர்கள் மீது தற்கொலைக்கு துாண்டுதல், கூர்மையான ஆயுதங்கள் வாயிலாக காயங்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலை துணைவேந்தர் சசிந்தீர நாத்தை சஸ்பெண்ட் செய்துள்ள கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், மாணவர் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள பரிந்துரைசெய்துள்ளார்.விசாரணை
இது தொடர்பாக கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:
மாணவர் மரணம் தொடர்பாக துணைவேந்தர் சசிந்தீர நாத் தாக்கல் செய்த அறிக்கை வாயிலாக, இந்த விவகாரத்தில் பல்கலை நடைமுறையில் உள்ள விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை என தெரிய வந்துள்ளது.குறிப்பாக, பல்கலை தொடர்பான விவகாரங்களில் துணைவேந்தர் அலட்சியமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல், மாநிலத்தில் உயர்கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.மாணவர் இறப்பு விவகாரத்தில், விசாரணையும் சரியாக நடத்தப்படவில்லை. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்படுகிறது. அதேசமயம் விசாரணை நேர்மையாக நடக்க ஏதுவாக, பல்கலை துணைவேந்தர் சசிந்தீர நாத்தைஇடைநீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, மாணவர் மரணத்தில் தொடர்புடையவர்களை ஆளுங்கட்சி காப்பாற்ற முயல்வதாக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளன.

