உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனின் போலீஸ் கனவை நிறைவேற்றிய அதிகாரிகள்
உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனின் போலீஸ் கனவை நிறைவேற்றிய அதிகாரிகள்
UPDATED : மார் 04, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 08:49 AM
பெங்களூரு:
நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவனுக்கு, ஒரு நாள் போலீஸ் அதிகாரியாக பணியாற்ற வாய்ப்பளித்து, அவரது ஆசையை போலீஸ் அதிகாரிகள் நிறைவேற்றினர்.பெங்களூரின், ஜெயநகரில் வசிக்கும் மோசின் ராஜ், 13, உடல் நிலை பாதிப்பால் அவதிப்படுகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது, ஆசையாகும்.இது பெங்களூரு தெற்கு மண்டல டி.சி.பி., சிவபிரகாஷ் தேவராஜுக்கு தெரிய வந்தது. எனவே சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க முன்வந்தார்.சிறுவன் போலீஸ் சீருடையுடன், நேற்று காலை 11:30 மணிக்கு, ஜெயநகரில் உள்ள டி.சி.பி., அலுவலகத்துக்கு வந்தார். அவரை டி.சி.பி.,யும், மற்ற அதிகாரிகளும் வரவேற்றனர். ஒவ்வொருவரும் சல்யூட் அடித்து, தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். அவர்களுடன் சிறுவன் கை குலுக்கினார்.அதன்பின் அலுவலகத்தில் இருந்த ஆயுதங்களை தொட்டுப் பார்த்து, அவற்றை பற்றி அறிந்து கொண்டார். குற்றவாளிகளை அடைக்கும் அறைகளை பார்வையிட்டார். டி.சி.பி., இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார். அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், ஜீப்பில் ரோந்து சுற்றினார்.மகனின் ஆசை நிறைவேறியதால், பெற்றோரும் மகிழ்ந்தனர்.

