காந்திமாநகர் அரசுப்பள்ளியில் ஒரு நாள் தலைமையாசிரியர்
காந்திமாநகர் அரசுப்பள்ளியில் ஒரு நாள் தலைமையாசிரியர்
UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 09:09 AM
கோவை:
கோவை காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அகில், தொடர்ந்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து வருகிறார். இவரை ஊக்கப்படுத்தும் விதமாக, ஒரு நாள் தலைமையாசிரியராக அறிவித்து, தலைமையாசிரியர் விஜயலட்சுமி கவுரவப்படுத்தினார்.மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கவும், பள்ளி தலைமையாசிரியர் புதுவிதமான ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, திருப்புதல் தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், தலைமையாசிரியர் நாற்காலியில் அமரவைத்து கவுரவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.அதை தொடர்ந்து, பள்ளி மாணவன் அகில் திருப்புதல் தேர்வில், 500க்கு 485 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றார். இதையடுத்து, அக்சயம் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து மாணவரை கவுரவிக்கும் விழா, பள்ளியில் நேற்று நடந்தது. இதில், மாணவன் அகில் தலைமையாசிரியர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்; பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.தலைமையாசிரியர் விஜயலட்சுமி கூறுகையில், இம்மாணவன் ஏழாம் வகுப்பு முதலே வகுப்பில் முதலிடம் பெற்று வருகிறார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 5ம் தேதி தேர்வுகள் துவங்குகின்றன. முன்பே அறிவித்தபடி, திருப்புதல் தேர்வில் முதலிடம் பெற்றதால், தலைமையாசிரியர் நாற்காலியில் அமரவைத்து ஊக்குவித்தோம். இது சக மாணவர்களுக்கும் நன்றாக படித்தால் சிறப்பான வரவேற்பு இருக்கும் என்பதை உணர்த்தும் என்றார்.

