UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 10:37 PM
இந்திரா நகர்:
ஆண்ட அரசு உழவாரத் திருப்பணிக் குழு, மரகதக் கூத்தன் அறக்கட்டளை, தமிழ் இலக்கிய பேரவை இணைந்து, பெங்களூர் நகரில் முதன் முதலாக திருவாசக கருத்தரங்கம் இந்திரா நகர் புரந்தர பவனில் நேற்று ஜெயஸ்ரீயின் வீணை இசையுடன் துவங்கியது.காத்து ஆட்கொள்ளும் குருமணி என்ற தலைப்பில், கோவை பேராசிரியர் சண்முகம்; செம்பொருள் துணிவு என்ற தலைப்பில் சென்னை அருணை பாலாறாவாயன் பேசினர். திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார், மாணிக்கவாசகர் ஓதுவார் குழுவினரின் தேவார இன்னிசை நடந்தது.மதுரை பொற்கிழி கவிஞர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் குழைத்த சொல்மாலை தலைப்பிலும்; திருவையாறு சாம்பவஸ்ரீ வே.ரமணன் திருக்கோவையார் வெளிக் கொணரும் திருவாசக உண்மைகள் என்ற தலைப்பிலும் பேசினர்.மதுரை பொன் முத்துக்குமார், தேவாரப் பண்ணிசை மணி குமரகுருபரன் ஓதுவார் குழுவினரின் திருவாசகம் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நெல்லை ரவீந்திரன் வயலின், திருவண்ணாமலை சிவகுமார் மிருதங்கம், மதுரை திருமுருகன் மோர்சிங் வாசித்தனர்.இதை தொடர்ந்து பேராசிரியர் சொ.சொ.மீ., நடுவராக இருந்து, பேராசிரியர் பாலாறாவாயன், பேராசிரியர் சிவ சண்முகம், சாம்பவஸ்ரீ ரமணன் ஆகியோர் கலந்து கொண்ட திருவாசகச் சுழலும் சொல்லரங்கம் நடந்தது.பின், திருவாசகம், திருக்கோவையார் பாடல்களுக்கு சிவ பூஜா, ஐஸ்வர்யா, நிமிஷா, சுஜித்ரா ஆகியோர் நடனமாடினர். நடன நிறைவில் சிவன் பார்வதி சமேதராகத் தோன்றியது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. நிகழ்ச்சிகளை தென்காசி திருவள்ளுவர் கழக துணைத்தலைவர் கடையம் கல்யாணி சிவகாமிநாதன் தொகுத்து வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளானோர் பங்கேற்றனர். திருவாசகம் பற்றிய பார்வையாளர்களின் கேள்விகளுக்கு, சிறப்பு சொற்பொழிவாளர்கள் விளக்கம் அளித்த கலந்துரையாடல் நடந்தது.விழா ஏற்பாடுகளை மரகதக் கூத்தன் அறக்கட்டளை சாரதா, ஆண்ட அரசு உழவாரத் திருப்பணிக்குழு முருகவேள், பெங்களூரு தமிழ் இலக்கிய பேரவை கடையம் ஆறுமுகம் செய்திருந்தனர்.விழாவில் திருவாசகம் கன்னட மொழி பெயர்ப்பு புத்தகம் வெளியிடப்பட்டது.

