UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 05:04 PM
மதுரை:
மேலுார் அரசு கலைக் கல்லுாரியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கலைக் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மண்டல பொறுப்பாளர் கிருஷ்ண ஜீவா தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ரேகா, பொன்ராம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது:
பேராசிரியர்களுக்கு எதிராக முதல்வர் செயல்படுகிறார். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கல்லுாரியில் இல்லை.பல்கலை நிர்ணயிக்கும் கட்டணங்கள் அதிகமாக முன்கூட்டியே வசூலிக்கப்படுகிறது. பட்டமளிப்பு விழா சான்றிதழுக்காக மாணவர்களிடம் ரூ.25க்கு பதில் தலா ரூ.300 வசூலிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் மதிப்புடன் நடத்தப்படுவதில்லை என்றனர்.இதுகுறித்து முதல்வர் மணிமேகலா தேவி கூறுகையில், ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் சில பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்ட ஆசிரியர்கள் நலன்சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனக்கு முன் இருந்த முதல்வர் நியமித்த அடிப்படையில் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்வாகத்தை எதிர்க்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர் என்றார்.

