போலியோ சொட்டு மருந்து கொடுக்காத குழந்தைகளை கண்டறிய உத்தரவு
போலியோ சொட்டு மருந்து கொடுக்காத குழந்தைகளை கண்டறிய உத்தரவு
UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 05:06 PM
திருப்பூர்:
திருப்பூரில் போலியோ முகாமில் விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து, நான்கு நாட்களுக்குள் சொட்டு மருந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் மார்ச் 3 ம் தேதி பிறந்தது முதல் ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டது. காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை, 1,154 மையங்களில், ஒரு லட்சத்து, 98 ஆயிரத்து, 756 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.முகாம்களில், ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து, 005 குழந்தைகளுக்கு (99.1 சதவீதம்) சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்நிலையில், விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை, தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.அங்கன்வாடி பணியாளர், ஊழியர், கிராம சுகாதார செவிலியர் உட்பட குழுவினர் வீடு, வீடாக சென்று பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை உள்ளதா, அக்குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு விட்டதா என கேட்டறிவர். குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்திருந்தால், வீட்டுக்கதவில் பி என குறிப்பிடுவர்.குழந்தை இருந்து ம் சொட்டு மருந்து கொடுக்க வில்லையெனில், எக்ஸ் என குறிப்பிடுவர். அடுத்தடுத்த நாட்களில் அவர்களிடம் மீண்டும் விபரம் கேட்டு, வெளியூரில் எங்காவது அல்லது வேறு இடங்களில் குழந்தை சொட்டு மருந்து கொடுத்திருந்தால், விவரங்களை அப்டேட் செய்து கொள்வர்.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் சொட்டு மருந்து வழங்க தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்று வழங்கலாம் என மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறையினர் தெரிவித்தனர்.

