நடுவுல ஒரு தேர்வை காணோம்: பல்கலை மாணவர்கள் அதிர்ச்சி
நடுவுல ஒரு தேர்வை காணோம்: பல்கலை மாணவர்கள் அதிர்ச்சி
UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 05:07 PM
போபால்:
ஜபல்பூர் பல்கலை, கணினி அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு தேதியை அறிவித்துவிட்டு, அந்த தேதியில் தேர்வை நடத்தாததுடன், அதற்காக எந்த ஏற்பாட்டையும் கூட செய்யாதது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ம.பி.,மாநிலம் ஜபல்பூரில் ராணி துர்காவதி பல்கலை உள்ளது. இப்பல்கலை கணினி அறிவியல் படிக்கும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக முறையே முதல் பருவம் மற்றும் 3ம் பருவ தேர்வு பிப்.,21 முதல் மார்ச் 13 வரை நடக்கும் என அறிவித்தது.அதில், Computer Organization and Assembly Language என்ற பாடத்திற்கான தேர்வு மார்ச் 5ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டையும் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்த நேற்று பல்கலையில் குவிந்தனர்.அங்கு வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. தேர்வு நடப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. ஊழியர்களிடம் விசாரித்த போது, இன்று எந்த தேர்வும் இல்லை. எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்றனர். மேலும், அன்றைய தின நடக்கவிருந்த தேர்வுக்கான வினாத்தாள் கூட தயாரிக்கப்படவில்லை.மாணவர்கள் வேதனையுடன் துணைவேந்தரை சந்தித்து புகார் கூறினர். தேர்வு ரத்து செய்யப்பட்டால், முன்கூட்டியே அறிவித்து இருக்க வேண்டியது தானே என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். அவர்களுடன் பேசி வழியனுப்பி வைத்த துணைவேந்தர், அடுத்த 3 நாட்களில் தேர்வு நடக்கும் என அறிவித்ததுடன், விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.

