5, 8, 9 பொதுத்தேர்வு ரத்துக்கு 2 நீதிபதிகள் இடைக்கால தடை
5, 8, 9 பொதுத்தேர்வு ரத்துக்கு 2 நீதிபதிகள் இடைக்கால தடை
UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 03:46 PM
பெங்களூரு:
கர்நாடகாவில், நடப்பாண்டு முதல் அமலுக்கு வர இருந்த, 5, 8, 9, பி.யு.சி., முதல் வகுப்பு பொது தேர்வை, கர்நாடக உயர் நீதிமன்ற தனி அமர்வு நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த ரத்துக்கு, இரு நீதிபதிகள் அமர்வு நேற்று இடைக்கால தடை விதித்து உள்ளது.கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி பொதுத்தேர்வு தற்போது அமலில் உள்ளது. 1 - 9 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, தற்போது மூன்று பருவ தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இதனால் மாணவர்களின் சாதனை என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியாததால், 5, 8, 9 மற்றும் பி.யு.சி., முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கும் 2023 - 2024 கல்வி ஆண்டு முதல் பொது தேர்வு நடத்தப்படும் என்று, கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டது.வரும் 11ம் தேதி முதல் 18 ம் தேதி வரை, தேர்வு நடக்க இருந்தது. அரசு சுற்றறிக்கையை ரத்து செய்ய கோரி, தனியார் பள்ளி கூட்டமைப்பு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவி ஆர்.ஹொசமணி, பொதுத் தேர்வுகளை ரத்து செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, அரசு சார்பில் நேற்று உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை, அவசர மனுவாக விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்வுக்கு தனி நீதிபதி விதித்த ரத்துக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல, 11ம் தேதி பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன.

