மறுசுழற்சியில் நூலாக மாறும் கழிவு துணி: பியோ தலைவர் சக்திவேல் பாராட்டு
மறுசுழற்சியில் நூலாக மாறும் கழிவு துணி: பியோ தலைவர் சக்திவேல் பாராட்டு
UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 05:23 PM
திருப்பூர்:
கழிவு துணி மற்றும் பழைய ஆடைகளை மறுசுழற்சி செய்து, நுாலாக மாற்றுவதில் பிரான்ஸ் முன்னோடியாக இருக்கிறது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசினார்.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அதிக பங்கு வகிக்கும் ஐரோப்பா, 2030ம் ஆண்டு முதல், இறக்குமதி செய்யும், 50 சதவீத பொருள் வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என கட்டாயமாக்கி உள்ளது. அதற்காக, ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் நாடுகளும் தங்களை தயார்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆயத்த ஆடை வீட்டு அலங்கார பொருட்கள் திறன்மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல், பிரான்சில் உள்ள, கழிவு துணி மற்றும் ஆடைகளை பஞ்சாக மாற்றி, பிறகு துணி உற்பத்தி செய்யும் நிறுவனங்களை பார்வையிட்டு வந்தார்.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், பிரான்சில் உள்ள, ஆன்ட்ரிட்ஸ் லாரோச் எஸ்.ஏ.எஸ்., நிறுவனத்தை பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில், அந்நிறுவன அதிகாரிகள், திருப்பூர் வந்து, ஏற்றுமதியாளர்களை சந்தித்து, கலந்தாய்வு நடத்தினர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்த கூட்டத்துக்கு, நிறுவன தலைவர் சக்திவேல், சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தனர். தென்னிந்திய நுாற்பாலைகள் சங்க (சைமா) துணை தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.நிறுவன தலைவர் சக்திவேல் பேசுகையில் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த போது, மறுசுழற்சி தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் நிறுவனங்களை பார்வையிட்டோம். உலக அளவில், கழிவு துணிகள் மற்றும் பழைய ஆடைகளை மறுசுழற்சி செய்து, பஞ்சாகவும், நுாலாகவும் மாற்றுவதில் ஆன்ட்ரிட்ஸ் லாரோச் எஸ்.ஏ.எஸ்., நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது, உலகம் முழுவதும் பரவியுள்ள சிறப்பு செயல்பாடுகளை நேரில் பார்த்து, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தோம் என்றார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில் திருப்பூரில், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை மேற்கொள்ள, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். மரபுசாரா மின் உற்பத்தி, மரக்கன்று வளர்ப்பு ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்ப சுத்திகரிப்பு, மறுசுழற்சி தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகிறோம். கழிவு துணிகளில் இருந்து, ஆடை தயாரிக்க ஆர்வமாக இருக்கிறோம் என்றார்.அதற்கான தொழில்நுட்பத்தையும், சிறப்பு வாய்ந்த இயந்திரங்களையும் அறிமுகம் செய்ய, ஆன்ட்ரிட்ஸ் லாரோச்சி சாஸ் நிறுவன பிரதிநிதிகள், எலியாஸ் ஜங்கர், தியரி மாசி ஆகியோர் வந்திருந்தனர். கழிவு துணி மற்றும் பழைய ஆடைகளை மறுசுழற்சி செய்ய உதவும் இயந்திரங்கள்; அவற்றின் பயன்பாடு குறித்தும், பஞ்சாக மாற்றி, நுாலாக மாற்றுவது, அதிலிருந்து ஆடை வடிவமைப்பது குறித்து, பவர் பாயின்ட் வாயிலாக விளக்கினர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் ராஜ்குமார் , பொருளாளர் கோபாலகிருஷ்ணன், பொதுசெயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார்துரைசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.