UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 12, 2024 09:28 AM
திருப்பூர்:
தமிழ் தேர்வை விட, ஆங்கிலத் தேர்வு எளிதாக இருந்ததால் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என ஆங்கில ஆசிரியர்கள் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த, பிளஸ் 1 ஆங்கிலத் தேர்வெழுத, 26 ஆயிரத்து, 409 பேர் தகுதி யானவர்கள். இவர்களில், 245 பேர் தேர்வுக்கு வரவில்லை. கற்றல் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால், 156 பேர் தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு பெற்றனர்; 26 ஆயிரத்து 8 பேர் தேர்வெழுதினர். 333 தனித்தேர்வர்களில், 240 பேர் தேர்வெழுதினர்; 91 பேர் ஆப்சென்ட்.கடந்த, 4ம் தேதி துவங்கிய தமிழ் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால், பிளஸ் 1 தேர்வெழுதியவர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த ஆங்கிலத் தேர்வு எளிமையாக இருந்தது; மாணவ, மாணவியர் அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.ஆங்கில தேர்வு குறித்து, மாணவ, மாணவியர் கூறியதாவது:
மிதுன்குமார்:
ஆசிரியர் குறிப்பெடுத்து கொடுத்த வினாக்கள் அப்படியே இடம் பெற்றிருந்தது. இதற்கு முந்தைய வினாத்தாள், திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் வந்திருந்ததால், விரைவாக விடையளிக்க முடிந்தது. நிச்சயம், 90க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற முடியும்.தமிழரசன்:
இரண்டு மதிப்பெண் கிராமர் பகுதி சற்று யோசித்து விடையெழுதும் வகையில் இருந்தது. மற்ற வகையில், அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. தமிழ் தேர்வை போன்று ஆங்கில தேர்வு கடினமாக இல்லை. நிச்சயம், 85 க்கும் அதிகமான மதிப்பெண்களை பெறுவேன்.மதுமிதா:
பாடங்களுக்கு பின் இருந்த கேள்விகள் இடம் பெற்றிருந்தது. இரண்டு மற்றும் நான்கு மதிப்பெண் பகுதியில் ஏற்கனவே, பலமுறை கேட்கப்பட்ட கேள்விகள் மீண்டும் கேட்டதால், எளிதில் விடையளிக்க முடிந்தது. புத்தகத்துக்குள் இருந்து கேள்விகள் இடம் பெறவில்லை. நல்ல மதிப்பெண் பெற முடியும்.கவுசல்யா:
ஓரிரு ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது. இரண்டு, நான்கு மதிப்பெண் வினாக்களில் எதிர்பார்த்த கேள்விகளே இடம் பெற்றிருந்தது. பலமுறை பயிற்சி செய்த வினாக்கள் என்பதால், தடுமாற்றமின்றி விடையளிக்க முடிந்தது. நிச்சயம் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.ராஜேஸ்வரி, ஆங்கில ஆசிரியை, வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யங்காளிபாளையம்:
வினாத்தாளில், மாணவர்கள் எதிர்பார்த்த கேள்விகளே அதிகம் இடம் பெற்றிருந்தது. நன்றாக படித்து, தேர்வெழுதிய மாணவ, மாணவியர் நிச்சயம் அதிக மதிப்பெண் பெற்று விட முடியும். ஒரு மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்ததால், நன்றாக படித்து, முயற்சி செய்தவர், 95க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்று விடுவர். மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் கிராமர் பகுதி எளிமையாகத்தான் இருந்தது. ஆங்கிலத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.