ஆதார் கார்டு இன்றி அவதிப்படும் மாணவிக்கு உதவ கோரிக்கை
ஆதார் கார்டு இன்றி அவதிப்படும் மாணவிக்கு உதவ கோரிக்கை
UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 12, 2024 05:04 PM
பெரம்பலுார்:
தோல் வியாதியால் கைரேகை இல்லாமல் ஆதார் கார்டு வாங்க முடியாமல் அவதிபடும் மாணவிக்கு முதல்வர் உதவ வேண்டும்&' என மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரம்பலுார் மாவட்டம், எளம்பலுார் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் -சத்யா தம்பதியின் மகள் பிருந்தா, 14, இவர், எளம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இவர், 5 வயது குழந்தையாக இருந்த போது ஆதார் கார்டு பெற்றுள்ளார். அதன் பின், ஒரு வகையான வினோதமான தோல் நோயால் பாதிக்கப்பட்டார்.இதனால், இரண்டு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் வெள்ளை தோல்களில் வெடிப்பு ஏற்பட்டு, தோல் பெயர்ந்து வருகிறது. இதனால், புண் ஏற்பட்டு நடக்க முடியாமலும், சாப்பிட முடியாமலும் அவதிப்படுகிறார்.இவரது இரண்டு கைகளிலும் ரேகை இல்லை. இதனால், பழைய ஆதார் கார்டை புதுப்பிக்க முடியவில்லை. ஆதார் கார்டு இல்லாததால் உடல் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை பெற முடியாமல், அரசின் சலுகைகளை பெற முடியாமல் அவதிப்படுகிறார்.எனவே, இந்த மாணவியின் நிலையை அறிந்து அவருக்கு ஆதார் கார்டு கிடைக்கவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும் என, மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கிடையே, மாணவி பிருந்தா நேற்று தன் பெற்றோருடன் பெரம்பலுார் கலெக்டர் கற்பகத்திடம் மனு கொடுத்தார். அப்போது, அரசு டாக்டரை அங்கு வரவழைத்த கலெக்டர், மாணவிக்கு உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு வழங்க உத்தரவிட்டார்.