மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் விரைவுபடுத்த வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் விரைவுபடுத்த வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:35 AM
மதுரை:
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2018 ஜூன் 20ல் ஒப்புதல் அளித்தது. கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கி டெண்டர் அறிவிப்பு வெளியிட 2018ல் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2018 டிச.,6ல் விசாரணையின் போது மத்திய அரசு,கேபினட் ஒப்புதல் கிடைத்தபின் எய்ம்ஸ் கட்டுமான பணி துவங்கி 45 மாதங்களில் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும், என அறிக்கை சமர்ப்பித்து வழக்கு முடிக்கப்பட்டது.கட்டுமானப் பணியை விரைவுபடுத்த உத்தரவிட மற்றொரு வழக்கு தாக்கல் செய்தேன். 2021 ஆக.,17ல் நீதிபதிகள் அமர்வு, 36 மாதங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது, என உத்தரவிட்டது.இதை நிறைவேற்றாததால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன். 2023 ல் விசாரணையின்போது, திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி ரூ.1977.8 கோடியில் தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கப்படும். இது 5 ஆண்டுகள் 8 மாதங்களில் (2021 மார்ச் 21 முதல் 2026 அக்டோபர்) நிறைவேற்றப்படும். இதற்காக ஜப்பானின் சர்வதேச கூட்டுறவு ஏஜன்சியிடம் (ஜிக்கா) கடன் பெற ஒப்பந்தம் 2021 மார்ச் 26ல் கையெழுத்தானது, என மத்திய அரசு தரப்பு தெரிவித்தது. தோப்பூரில் சுற்றுச் சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியை குறித்த காலவரம்பிற்குள் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.மத்திய அரசு தரப்பு:
2026க்குள் கட்டுமானப் பணி நிறைவடையும். கூடுதல் விபரங்கள் தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள் மத்திய நிதித்துறை, சுகாதாரத்துறை செயலர்கள், எய்ம்ஸ் இயக்குனர், தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டு 2 வாரங்கள் ஒத்தி வைத்தனர்.