பாரதியார் பல்கலையில் 321 ஏக்கரில் டெக்சிட்டி: வலுக்கும் எதிர்ப்பு!
பாரதியார் பல்கலையில் 321 ஏக்கரில் டெக்சிட்டி: வலுக்கும் எதிர்ப்பு!
UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:35 AM
-நமது நிருபர்-
கோவையில் பாரதியார் பல்கலை வளாகத்தில், 321 ஏக்கர் பரப்பளவில், டெக்சிட்டி அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கும் முன்பே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழக அரசின் கடந்த 2022-23 பட்ஜெட்டில், சென்னை, கோவை, ஓசூர் ஆகிய நகரங்களில், டெக்சிட்டி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே பகுதியில் வாழ்விடம், பணியிடம், பொழுதுபோக்கு, வணிகப் பகுதிகளை உள்ளடக்கிய தொழில் நுட்ப நகரம் தான், இந்த டெக்சிட்டி என்று தமிழக அரசு விளக்கியது. ஆனால் ஓராண்டாக ஒரு வேலையும் நடக்கவில்லை. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலான போது, கடந்த ஆண்டில் அறிவித்த இந்த திட்டம் கிடப்பில் இருப்பது பற்றி விமர்சனம் எழுந்தது.அதற்குப் பின்பே, கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில், 321 ஏக்கர் பரப்பளவில், இந்த டெக்சிட்டி அமைப்பதற்கு, விரிவான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்குத் தகுதியான நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான இ டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசின் எல்காட் நிறுவனம், கடந்த வாரத்தில் டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் சமர்ப்பிக்க ஏப்.2,கடைசி நாளாகும். வீட்டு வசதி, ஷாப்பிங் மால், ஓட்டல், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள், சில்லரை வணிகப்பகுதி, உரிய அணுகுசாலைகள் ஆகியவற்றுடன், தங்கு தடையற்ற மின்சாரம், தண்ணீர் வசதி கொண்ட நகரமாக இருக்கும் வகையில் விரிவான மாஸ்டர் பிளான் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சோமையம்பாளையம் வருவாய் கிராமத்துக்குட்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத்துக்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சட்டக்கல்லுாரி, அண்ணா பல்கலை உள்ளிட்ட பலவற்றுக்கும் இடம் ஒதுக்கியது போக, தற்போது 800 ஏக்கர் மட்டுமே, பல்கலை வசம் உள்ளது. அதில் தான் இந்த 321 ஏக்கர் &'டெக்சிட்டி&' அமைப்பதற்கு, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இந்தப் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. மலையில் அமைந்துள்ள வனப்பகுதியில், யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களும் உள்ளன. ஏற்கனவே, பல்கலை வளாகத்திலும், இதை ஒட்டியுள்ள மருதமலை பகுதியிலும், யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாகவுள்ளது. மனித-வன உயிரின மோதலும் அதிகம் நடக்கிறது.இதனால் இந்தப் பகுதியை, டெக்சிட்டிக்குத் தேர்வு செய்தது குறித்து, சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது யானை-மனித மோதலை அதிகரிக்கும்; மலை அழிக்கப்படும்.மருதமலை ரோடு, கல்வி நிலையங்கள் அதிகமுள்ள பகுதி என்பதால், ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வி நிறுவனங்களை அமைக்க ஏற்ற பகுதி; ஆனால் டெக்சிட்டி போன்ற தொழில் மற்றும் வணிகப்பகுதிக்கு சரியான தேர்வில்லை என்றும் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். மாஸ்டர் பிளான் தயாரிக்கும் முன்பே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.