நுாலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க இணையதளம் துவக்கம்
நுாலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க இணையதளம் துவக்கம்
UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:43 AM
சென்னை:
நுாலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக, புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. துறை சார் நிபுணர்களின் கருத்துக்கள், வாசகர்களின் தேவைகள் போன்றவை புத்தக கொள்முதலில் பரிசீலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.நுாலகங்களுக்கான புத்தக கொள்முதல் கொள்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதன்படி, புத்தக கொள்முதலுக்கு, https://bookprocurement.tamilnadupubliclibraries.org/ என்ற இணையதளம் துவக்கப்பட்டுஉள்ளது.இணையதளத்தை, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் துவங்கி வைத்தார்.முக்கிய அம்சங்கள்
இணையதளத்தில், புதிய புத்தகங்களின் விபரங்களை பதிவு செய்யலாம். அவற்றை புத்தக மதிப்பீட்டு குழு மதிப்பீடு செய்து, கொள்முதல் செய்ய பரிந்துரைக்கும் ஒவ்வொரு புத்தகமும், பன்னாட்டு புத்தக குறியீட்டு எண்ணான ஐ.எஸ்.பி.என்., பெற்றிருக்க வேண்டும். புத்தகத்தை வாங்க வேண்டுமா என, தனி மனித சார்பற்ற முறையில் முடிவு செய்யப்படும்.புத்தகங்களை தேர்வு செய்ய, தேர்ந்த விமர்சகர்கள், வாசகர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்படும். புத்தக தேர்வு முறையில், தேர்வு குழுவின் சார்பில், துறை சார் நிபுணர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும். வாசகரின் புத்தக பயன்பாடு மற்றும் தேவை அடிப்படையிலும், புத்தக தேர்வு பரிசீலனை செய்யப்படும்.இவ்வாறு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுஉள்ளன.இதற்கிடையில், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், சிறுவர் மற்றும் தமிழ் புத்தகங்கள் மட்டும், வாசகர்கள் படிப்பதற்கு இரவல் எடுத்தும் செல்லும் வசதி துவக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன், பொது நுாலக இயக்குனர் இளம்பகவத், நுாலக இணை இயக்குனர் இளங்கோ சந்திரகுமார், சென்னை மாவட்ட நுாலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

