பிரெய்லி வடிவிலான நுால்கள் பார்வையற்றோருக்கு இலவசம்
பிரெய்லி வடிவிலான நுால்கள் பார்வையற்றோருக்கு இலவசம்
UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:44 AM
சென்னை:
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் அச்சிடப்பட்டுள்ள, பிரெய்லி வடிவிலான சங்க இலக்கிய நுால்கள் பார்வையற்றோருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, பெரும்பாக்கத்தில் இயங்குகிறது. இதில், பல்வேறு தமிழ் வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. உலகிலேயே முதல்முறையாக அதிக நிதியுதவியுடன், 13,000 பக்கங்களை உடைய சங்க இலக்கியங்களை, பார்வையற்றவர்கள், கையால் தொட்டுணர்ந்து படிக்கும் வகையிலான, பிரெய்லி முறையில் அச்சிட்டுள்ளது.இதில், தமிழின் பழமையான இலக்கண நுாலான தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, கீழ்க்கணக்கு நுால்கள், அடிப்படை இலக்கண நுால்கள், திருக்குறள் உள்ளிட்ட 46 நுால்களின் மூல பாடங்கள், சந்தி அமைப்பில் எளிய உரையுடன், பார்வையற்றோர் தொட்டு உணர்ந்து படிக்கும் வகையில், பிரெய்லி முறையில் அச்சிட்டுள்ளன.இவற்றை பார்வையற்றோருக்கு இலவசமாக அளிக்கும் பணியை நிறுவனம் துவங்கி உள்ளது. இந்த நுால்களைப் பெற, பார்வை மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றை இணைத்து, உரிய முகவரியுடன் 78458 74314 என்ற வாட்ஸாப் எண்ணுக்கோ, books@cict.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்ப வேண்டும்.விபரங்கள் கிடைத்தபின், அஞ்சல் செலவு உட்பட அனைத்து செலவுகளையும் ஏற்று, இந்த நுால்களை அனுப்பி வைக்கிறது.

