ராணிப்பேட்டையில் கார் தொழிற்சாலை: ரூ.9,000 கோடியில் டாடா அமைக்கிறது
ராணிப்பேட்டையில் கார் தொழிற்சாலை: ரூ.9,000 கோடியில் டாடா அமைக்கிறது
UPDATED : மார் 14, 2024 12:00 AM
ADDED : மார் 14, 2024 08:38 PM
சென்னை:
தமிழகத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் வாகன தொழிற்சாலையை அமைக்கிறது. இதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு, டாடா மோட்டார்ஸ் இடையில், சென்னையில் நேற்று கையெழுத்தானது.டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாகன தொழிற்சாலை அமைக்க உள்ளது. அங்கு, ஐந்து ஆண்டுகளில், 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது; 5,000 பேருக்கு வேலை கிடைக்கும்.தமிழகத்தில் வாகன தொழிற்சாலை அமைக்க, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு, டாடா மோட்டார்ஸ் குழு தலைமை நிதி அலுவலர் பாலாஜி இடையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் ராஜா, தொழில் துறை செயலர் அருண் ராய், சிப்காட் மேலாண் இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் டாடா குழும அதிகாரிகள் பங்கேற்றனர்.பின், அமைச்சர் ராஜா அளித்த பேட்டி:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, ஜனவரியில் வின்பாஸ்ட் நிறுவனம், 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை அமைக்க கையெழுத்திட்டது. இதற்கு, பிப்ரவரியில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் முதல் முறையாக டாடா நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைக்கிறது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தால், 9,000 கோடி ரூபாய் முதலீடு, 5,000 பேருக்கு சிறப்பான உயர்தர வேலைவாய்ப்பு கிடைக்கும்.வேறு எந்த மாநிலத்திலும் குறுகிய காலத்தில் இவ்வளவு முதலீடு வந்ததாக தெரியவில்லை. இதற்கு, தமிழகத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், தொழிற்சாலை துவங்க ஏதுவான சூழல் உள்ளிட்ட வையே காரணம். இவற்றை பார்த்து, பெரிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளை துவக்குகின்றன.அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்கிறது. இது தொடர்பான கூடுதல் தகவலை அந்நிறுவனம் தெரிவிக்கும். தமிழகத்திற்கு புதிய முதலீடுகள் வரும் போது, ஊக்குவிப்பு சலுகை வழங்கப்படுகிறது என்பதை தாண்டி, திறன்மிக்க பணியாளர்கள் நம் மாநிலத்தில் உள்ளனர்.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அவை, ஒரு துவக்கம் தான். மொபைல் போன் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்ய உள்ளன. தமிழகத்தின் இளைஞர்கள் அதிகம் படித்துள்ளனர். அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.நாங்கள் ஒப்பந்தம் செய்ததில், 70 சதவீதம் முதலீடுகளாக மாற்ற வேண்டும் என்பது இலக்கு. டாடா மோட்டார்ஸ் அதிக பெண்களை வேலைக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

