UPDATED : மார் 15, 2024 12:00 AM
ADDED : மார் 15, 2024 09:09 AM
ராமாபுரம்:
சென்னை விருகம்பாக்கம், நடேசன் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ்ராஜ், 18; ராமாபுரத்திலுள்ள பொறியியல் கல்லுாரியில், பி.இ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் பைக்கில் கல்லுாரிக்கு சென்ற போது, ராமாபுரம் ஆறுமுகம் தெருவில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், ஆகாஷ்ராஜுக்கு கால், கையில் ரத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர்.உடனே ஆகாஷ்ராஜ், அவர்களது பைக்கில் ஏறிச் சென்றார். மர்ம நபர்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல், ராமாபுரம் பூதப்பேடு பகுதியிலுள்ள மறைவான இடத்திற்கு அவரை கடத்திச் சென்றுள்ளனர்.அங்கு கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். பின், அங்கிருந்தோர் ஆகாஷ்ராஜை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்படி, ராமாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

