UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 09:12 AM
ஊட்டி:
ஆண்டு தோறும், மார்ச் 14ம் தேதி உலகம் கணித தினம் கெண்டாடப்படுகிறது.பல நாடுகளில் இந்த நாளை பை தினம் எனவும் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, ஊட்டி எச்.பி.எப்., அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பங்கேற்று பேசியதாவது:
பை என்ற கிரேக்க எழுத்து, பள்ளி மாணவர்களுக்கு தெரியும். அதனை, 3.14 என்ற தசம பின்னத்தில் எழுதலாம். இதில், மூன்று என்பது மார்ச் மாசத்தையும், 14 என்பது 14ம் தேதியையும் குறிக்கும். அறிவியலின் அனைத்து துறைகளிலும் கணிதத்தின் பங்கு கணிசமானது. கணிதம் இல்லாமல் நவீன அறிவியல் துறை எதுவும் செயல்படாது.நவீன செயற்கை நுண்ணறிவு குவாண்டம் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து உயிரியல் துறைகளிலும் கணிதம் பயன்படுத்தப்படுகிறது. நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம்., போன்ற அனைத்து கருவிகளிலும் கணிதமே செயல்படுகிறது. பை யின் மதிப்பானது ஒரு வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து கிடைக்கும் எண்ணுக்கு சமம். இந்த எண், ஒரு முடிவுறாத பகா எண்ணாகும்.இந்த எண்ணின் மதிப்பு, 100 ட்ரில்லியங்கள் தசம இட திருத்தமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பை, 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கணிதவியலாளர்கள் அறிந்திருந்தார்கள். கணிதவியலாளர்கள், ஆரியபட்டா, பாஸ்கரா, மாதவன், ஆகியோர் கூட, இதன் மதிப்புகளை, ஐந்து தசம இட திருத்த திருத்தமாக கண்டறிந்துள்ளனர்.கணித மேதை ராமானுஜம் கண்டறிந்த, ஒரு சூத்திரம் பை யின் மதிப்பை, ஒன்பது தசம இட திருத்தமாக கணித்தது பையின் மதிப்பை மக்களிடையே பரப்பும் வகையில், ஹாலிவுட் திரைப்படம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த நாள் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனின் பிறந்த நாள் என்பது சிறப்பு. கணிதம் மாணவர்களின் மூளைத் திறனை கூர்மைப்படுத்துகிறது. மாணவர்களிடையே கணிதம் கற்கும் ஆர்வம் குறைந்து வருவது வருந்தத்தக்கது.ஒரு நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிதத்தின் பங்கு முக்கியமானது. மாணவர்கள் கணிதத்தை புரிந்து படித்தால் கணிதத்தை விட சிறப்பான பாடம் எதுவும் இல்லை. ஆசிரியர்களும் மாணவர்களிடையே கணித ஆர்வத்தை துாண்டும் வகையில் கணிதத்தை கற்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். ஆசிரியை ரேணுகாதேவி வரவேற்றார். ஆசிரியை சிந்தியா நன்றி கூறினார்.

