UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 09:10 AM
உடுமலை:
உடுமலையில் பணி ஓய்வுபெறும் ஆசிரியருக்கு மரியாதை செலுத்தி, சாரட் வண்டியில் ஏற்றிச்சென்று, முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை எஸ்.கே.பி., அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக, 31 ஆண்டுகள் பணி செய்தவர் ஆசிரியர் அன்பரசு. இவரின் பணிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிந்து ஓய்வு பெற உள்ளார்.
பள்ளியில் இவருக்கு பணிநிறைவு விழா நடந்தது. இதையடுத்து, கடந்த இருபது ஆண்டுகளாக, இவரிடம் படித்து பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் குழுவாக இணைந்து, சிறப்பு தருணத்தை ஏற்படுத்தினர்.
விழா நிறைவுபெற்றவுடன், ஆசிரியரை பெருமைப்படுத்தும் வகையில், பள்ளியிலிருந்து அவரின் வீட்டுக்கு அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் அழைத்துச்சென்றனர். இந்நிகழ்ச்சி பள்ளி நிர்வாகத்தினருக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நெகிழ்வை ஏற்படுத்தியது.
ஆசிரியர் அன்பரசு கூறியதாவது:
மாணவர்கள் இத்தகைய ஏற்பாட்டை செய்தது மிகவும் மகிழ்வாகவும், பெருமையாகவும் உள்ளது. எனது தந்தை இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக, 34 ஆண்டுகள் பணிசெய்துள்ளார்.
நானும் இப்பள்ளி மாணவன்தான். தற்போது இந்த பந்தம் நிறைவு பெறுவது வருத்தமாக இருப்பினும், மாணவர்களும், பள்ளி நிர்வாகமும் என்மீது கொண்டுள்ள அன்பினால் மகிழ்வாக உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

