மலைவாழ் மக்களுக்கு நடமாடும் சித்த மருத்துவ பிரிவு துவக்கம்
மலைவாழ் மக்களுக்கு நடமாடும் சித்த மருத்துவ பிரிவு துவக்கம்
UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 09:34 AM
உடுமலை:
உடுமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு, சித்த மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில், நடமாடும் மருத்துவ பிரிவு துவக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 10 இடங்களில் பழங்குடியின மக்களுக்காக நடமாடும் சித்த மருத்துவ பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை எரிசனம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை அமராவதி வனச்சரகம் குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை, திருமூர்த்திமலை, கோடந்துார், தளிஞ்சி, தளிஞ்சி வயல் உள்ளிட்ட, 17 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.இங்கு, ஆண்கள், 1,569 பேரும், பெண்கள், 1,873 பேரும், குழந்தைகள், 167 பேர் என மொத்தம், 3,349 பேர் வசித்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் சித்தமருத்துவ பிரிவு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், வாகனம் வாயிலாக, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு நேரடியாகச்சென்று சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படவுள்ளது.இதற்கான துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், சித்த மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

