UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 09:35 AM
உடுமலை:
உடுமலை கோட்டத்தில் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறையால், இடநெரிசல் ஏற்படுகிறது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை நடப்பாண்டிலும் கணிசமாக அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், அரசுப்பள்ளிகளுக்கான விழிப்புணர்வு, அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகை, மேம்படுத்தப்பட்ட கற்பித்தல் முறைகள், ஆங்கிலவழிக்கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தற்போது மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.கடந்த சில கல்வியாண்டுகளில், சரிந்து வந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. ஆனால், தற்போது அரசுப்பள்ளிகளுக்கு வேறுவிதமான பிரச்னை ஏற்பட்டுள்ளது.மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அவர்களுக்கான வகுப்பறை இல்லாமல் கூட்ட நெரிசலாக அமர வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளிகளில், சமநிலையான மாணவர் எண்ணிக்கை இல்லாமல் உள்ளது. இதனால் வகுப்பறை பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒரு வகுப்பறைக்கு, 30 மாணவர்கள் என்ற சதவீதம் இருப்பினும், தற்போதைய எண்ணும் எழுத்தும் திட்டத்துக்கு கூடுதல் அறைகள் தேவையாக உள்ளன.மாணவர்களுக்கான பாடம் நடத்தும் முறை செயல்வடிவில் இருப்பதால், எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் நெரிசல் ஏற்படுகிறது. தற்போது ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்பட உள்ளதால், வகுப்பறை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.பள்ளி மேலாண்மை குழுவினர் கூறியதாவது:
பள்ளிகளில் முன்பு, துவக்கநிலை வகுப்பு மாணவர்களை, ஒன்றாக அமர வைத்து பாடம் நடத்தினர். இப்போது தமிழ்வழி, ஆங்கிலவழி என இரண்டு பிரிவுகளாகவும், எண்ணும் எழுத்தும் திட்டத்தால், தனித்தனி வகுப்புகளாகவும் தான் மாணவர்களுக்கு, பாடம் நடத்த வேண்டியுள்ளது.ஒவ்வொரு வகுப்புக்கும், தனி அறை தேவையாக உள்ளது. இதுதவிர, நுாலகமாக செயல்பட்ட அறைகளும், இப்போது மாணவர்கள் அமர்வதற்காக மாற்றப்பட்டுள்ளன.இதனால் மற்ற வகுப்பு மாணவர்கள், அந்த வகுப்பில் வந்து நுாலகத்தை பயன்படுத்த முடியாது. இடவசதி உள்ள பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள் கட்டவேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கு அரசுப்பள்ளிகளின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

