UPDATED : மார் 18, 2024 12:00 AM
ADDED : மார் 18, 2024 09:42 AM
மதுரை:
உலகை வெல்ல கல்வியே மிகச்சிறந்த ஆயுதமாக உள்ளது என மதுரை தியாராஜர் கலை, அறிவியல் கல்லுாரியின் 75ம் ஆண்டு விழாவில் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசினார்.இக்கல்லுாரி விழா, திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. கல்லுாரித் தலைவர் உமா தலைமை வகித்தார். செயலாளர் ஹரிதியாகராஜன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாண்டியராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஹட்சன் அக்ரோ நிறுவன சேர்மன் சந்திரமோகன் பேசுகையில், எனக்கு தொழில் செய்யவே விருப்பம். இந்தியாவுக்கு தொழில் முனைவோர்தான் தேவை. எனவே மாணவர்கள் நிறுவனங்களில் வேலை தேடாமல் சொந்தமாக தொழில் செய்ய முன்வர வேண்டும் என்றார்.சிறந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேசியதாவது:
உங்கள் வாழ்க்கை கப்பலின் மாலுமி நீங்கள்தான். நான் யார், நமக்கு என்ன வேண்டும், நம் வீட்டுச் சூழல் என்ன என்பதை இன்றே நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த உலகை வெல்ல கல்வியே மிகச்சிறந்த ஆயுதம். மாணவர்கள் சிந்திக்கும் திறன், படைப்பாற்றல், தொடர்புத்திறன் ஆகிய 3 திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் முன்னேற 5 ரகசியங்கள். காலையில் 4:30 மணிக்கு எழுதல், தினமும் 2 மணி நேரம் துறைசார்ந்த படிப்பு, ஒரு மணி நேரம் நாளிதழ் வாசிப்பு, ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, 10 நிமிடங்கள் தியானம். இவற்றை செய்தால் 6 மாதங்களில் வாழ்க்கை மாறும், என்றார் டீன் ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.