துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: யு.ஜி.சி., தலைவர் அறிவுறுத்தல்
துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: யு.ஜி.சி., தலைவர் அறிவுறுத்தல்
UPDATED : மார் 18, 2024 12:00 AM
ADDED : மார் 18, 2024 05:49 PM
கோவை:
தமிழக பல்கலைகளில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பாததால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. காலிப்பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலை மானியக்குழு சேர்மன் மமிதாலா ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், 35வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. பல்கலை மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) தலைவர் மமிதாலா ஜெகதீஷ்குமார் நிகழ்ச்சியை, துவக்கி வைத்தார்.இதில், அவர் பேசியதாவது:
துணைவேந்தர்கள் காலி பணியிடங்களால், பல்வேறு சவால்களை மாநில பல்கலைகள் எதிர்கொள்கின்றன. துணைவேந்தர் தேடல் குழுவில், யு.ஜி.சி., பிரதிநிதிகள் இடம் பெறவேண்டும் என்பதை, நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.பல்கலையில் துணைவேந்தர் காலியிடங்களை நிரப்ப, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமையின்றி பல்கலைகளில் மாணவர்களின் கல்வித்தரம், எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.புதிய கல்விக்கொள்கையின் படி,நான்கு ஆண்டு படிப்பு முடிப்பவர்கள் பி.எச்டி., ஆய்வு படிப்பில் சேரலாம்; இதை நடைமுறைப்படுத்துவதற்கான பணி நடந்து வருகிறது.நாட்டில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, நிரந்தர கல்விக்கணக்கு பதிவேடு, அடையாள அட்டை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிவடையும்.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்கலைகள் இந்தியாவில், கல்வி மையங்களை நிறுவ ஆர்வம் காட்டி வருகின்றன; இதற்கென பிரத்யேக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பல்கலைகள் வாயிலாக, ஆரோக்கியமான போட்டிக்கு வழிவகுக்கும்.ஏதேனும் பல்கலைகளில், விதிமுறைக்கு மாறாக பட்டப்படிப்பு வழங்கினால், யு.ஜி.சி., இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம். மாநில பல்கலைகளில், காலியாகவுள்ள இடங்களை நிரப்ப, கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.