கல்வி உதவித் தொகை திட்டத்தில் வருமான வரம்பை கைவிட இந்திய கம்யூ., கோரிக்கை
கல்வி உதவித் தொகை திட்டத்தில் வருமான வரம்பை கைவிட இந்திய கம்யூ., கோரிக்கை
UPDATED : மார் 18, 2024 12:00 AM
ADDED : மார் 18, 2024 05:57 PM
புதுச்சேரி:
காமராஜர் கல்வி உதவித் திட்டத்தில் நிதியுதவி பெற, வருமான வரம்பு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும் என, இந்திய கம்யூ., புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியில் காமராஜர் கல்வி உதவித்தொகை திட்டத்தில், இதுவரையில் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்காமல் சென்டாக் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அரசால் ரூ. 2.25 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சில அதிகாரிகள், இந்த உதவி தொகை திட்டத்தின் பயன், சென்டாக் மூலம் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்காத வகையில் தற்போது செயல் பட்டுள்ளனர்.இந்த திட்டத்தில், வருமான உச்ச வரம்பை ரூ. 8 லட்சம் என, நிர்ணயித்து அதற்கான கோப்புகளை, கவர்னர் மற்றும் முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளனர்.இத்திட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ள நிலையில், அதன் வருமான உச்ச வரம்பை உயர்த்தி வழங்க சமர்ப்பித்த கோப்பிற்கு ஒப்புதல் பெற்று, மாணவர்களின் கல்வியில் தடங்கல் ஏற்படுத்த சிலர் இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.இது வருங்காலத்தில் உயர்கல்வி படிக்க நினைக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பேரிடியாக உள்ளது.அதனால் புதுச்சேரி அரசு காமராஜர் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படாத கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.