பகல் நேர பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதி ;கல்வியாளர்கள் வலியுறுத்தல்
பகல் நேர பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதி ;கல்வியாளர்கள் வலியுறுத்தல்
UPDATED : மார் 19, 2024 12:00 AM
ADDED : மார் 19, 2024 09:29 AM
உடுமலை:
மாற்றுத்திறனாளி மாணவர்கள் பராமரிக்கப்படும், பகல்நேர பாதுகாப்பு மையங்களுக்கு, முழுமையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு வட்டாரத்திலும், பள்ளி செல்லும் வயதிலுள்ள மாற்றுத்திறன் மாணவர்களை பராமரிப்பதற்கும், அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், பகல்நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.உடுமலை மற்றும் குடிமங்கலத்தில், தலா ஒன்று உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விதிட்ட சிறப்பாசிரியர்கள், இதன் பொறுப்பாளர்களாக உள்ளனர். மாணவர்களுக்கு, பள்ளிகளில் வழங்கப்படும் வழக்கமான சத்துணவு மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தளவாடப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மையங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. மாற்றுத்திறன் மாணவர்களை அழைத்து வருவதற்கான வாகனம், அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டி வழங்குவது, பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.ஒன்றன்பின் ஒன்றாக குறைந்து, இப்போது சிறப்புத்திட்டங்கள் என எதுவும் இந்த மையங்களுக்கு இல்லை. பிசியோதெரபி சிகிச்சைக்கு தற்போது பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்த பயிற்சியும் முடங்கியுள்ளது.அதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்படும், சுண்டல், பருப்பு வகைகள் போன்ற சிற்றுண்டிகளும் நிறுத்தப்பட்டு விட்டன. பெற்றோராக மாணவர்களை அழைத்து வர வேண்டி இருப்பதால், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதற்கான வாகன வசதிகளும் இப்போது இல்லை.இதனால் மாணவர்களின் எண்ணிக்கையும், மையங்களில் கணிசமாக குறைந்து விட்டது. மேலும், மையங்களிலிருந்து பள்ளி வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.கல்வியாளர்கள் கூறியதாவது:
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதில், அரசு அலட்சியமாக உள்ளது. ஆண்டுதோறும் சிறப்பு போட்டிகளும், நிகழ்ச்சிகளும் மட்டுமே நடத்தினால், அந்த மாணவர்கள் எவ்வாறு மேம்பட முடியும். மையங்களை புதுப்பித்து, அவர்களுக்கான சிறப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.