திட்டங்களை விரிவாக எடுத்து சொல்லுங்க! ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
திட்டங்களை விரிவாக எடுத்து சொல்லுங்க! ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
UPDATED : மார் 22, 2024 12:00 AM
ADDED : மார் 22, 2024 09:55 AM
உடுமலை:
அரசுப்பள்ளிகளில் இருக்கும் திட்டங்களை, விரிவாக பெற்றோருக்கு எடுத்துரைக்க கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.அரசுப்பள்ளிகளில் பல்வேறு நலத்திட்டங்கள், மாணவர்களுக்கு தரமான அடிப்படை கல்வி, உயர்கல்விக்கான வாய்ப்புகள், இட ஒதுக்கீடு என பல்வேறு சிறப்பு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.ஆனாலும், பெரும்பான்மையான பெற்றோருக்கு, பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்ட பொருட்கள் மட்டுமே தெரிந்துள்ளது. அரசுப்பள்ளிகளில் இருக்கும் திட்டங்கள், அங்கு படிக்கும் மாணவருக்கு கிடைக்கும் சலுகைகள், எதிர்காலத்தில் எவ்வாறு உதவுகிறது என்பது, நலிவடைந்த குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள், காப்பீடு உள்ளிட்டவை குறித்து பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.இதுகுறித்து, சில பள்ளிகள் மட்டுமே முழுமையாக விளக்கமளித்தும், அவ்வப்போது கூட்டங்களில் பெற்றோருக்கு தெளிவுபடுத்துகின்றன. தற்போது அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தீவீரமாக நடக்கிறது.திருப்பூர் மாவட்ட அளவில், ஆசிரியர்களுக்கு சேர்க்கை குறித்து தொடர்ந்து கல்வித்துறை அலுவலர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.ஒற்றை இலக்கில் இருக்கும் மாணவர் எண்ணிக்கையை, உயர்த்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொள்வது, அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், அப்பள்ளி மாணவர்களுக்கான சலுகைகள் குறித்து, பெற்றோருக்கு விரிவாக எடுத்துரைக்கவும், கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளனர்.