UPDATED : மார் 22, 2024 12:00 AM
ADDED : மார் 22, 2024 09:57 AM
மாமல்லபுரம்:
மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இயங்கி வருகிறது. இந்திய குடிமக்களுக்கு, இந்த ஆணையம் வாயிலாக, ஆதார் எனப்படும் தனித்துவ எண்ணை உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள், பொதுமக்களுக்கு அளிக்கும் பல்வேறு சேவைகள் பெறவும், அடையாள ஆவணமாகவும், ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் ஆவண பதிவில், உரியவர் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம்பெறும்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதார் விபரங்கள், தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. புதிய நபர்களும் ஆதார் விபரங்கள் பதிந்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் உருவாகி நான்காண்டுகள் கடந்தும், ஆதார் பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் என்றே பதியப்படுகிறது.அதனால், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய சேவைகளைப் பெற விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர் முகவரியில் செங்கல்பட்டு மாவட்டம் என குறிப்பிடுகின்றனர். ஆதார் ஆவணத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் என உள்ளதால், சிக்கல் ஏற்படுகிறது. மத்திய அரசு, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களையும், ஆதார் பதிவில் பதிவேற்றி புதுப்பிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.