ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங்: காத்தாடும் தனியார் பயிற்சி பள்ளிகள்
ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங்: காத்தாடும் தனியார் பயிற்சி பள்ளிகள்
UPDATED : ஜூலை 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பயிற்சியை முடித்தால் உடனடியாக வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளதால், தனியார் பள்ளிகளில் சேர்ந்து பணத்தையும், காலத்தையும் செலவழிக்க வேண்டுமா? என்று மாணவர்கள் யோசிப்பதால் 50 சதவீத இடங்கள் காத்தாடிக் கொண்டிருக்கின்றன.
இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான முதல் கட்ட கவுன்சிலிங், கடந்த 9ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடந்தது.
இதில், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இரண்டாயிரத்து 720 இடங்கள் மள மளவென்று நிரம்பின. அடுத்ததாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஓரளவு நிரம்பின.
இறுதியில் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே மிச்சம் இருந்தன. 19 ஆயிரத்து 920 இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 25ம் தேதி முதல் ஐந்து மையங்களில் நடந்து வருகிறது. ஜூலை 30ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிகிறது.
அரசுப் பள்ளிகளில் சேர அதிக ஆர்வம் காட்டிய மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டவில்லை. பல மையங்களில் மாணவர்கள் கூட்டமே இல்லை.
டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள மையத்தில் கலைப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் இம்மாதம் 25, 28 தேதிகளில் நடந்தது. முதல் நாளன்று 170 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 70 பேர் மட்டுமே வந்தனர்; 100 பேர் வரவில்லை. பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 450 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
ஆனால், கலைப்பிரிவில் மாணவர்களே இல்லாததால், அனைத்து இடங்களும் மாணவிகளுக்கு மாற்றப்பட்டன. 28ம் தேதி நடந்த கவுன்சிலிங்கிற்கும் அதிகமான மாணவர்கள் வரவில்லை. இதேபோல் பல மையங்கள் மாணவர்கள் இல்லாமல் காத்தாடின. இதனால் 50 சதவீத இடங்கள் மட்டுமே பூர்த்தியாகியுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்னும் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளைப் போல தனியார் பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததற்கு முக்கிய காரணம் இருக்கிறது. அரசு பள்ளிகளில் கட்டணம் மிகவும் குறைவு. தனியார் பள்ளிகளைப் போல் நினைத்ததற்கெல்லாம் கட்டணம் வசூலிக்க முடியாது. கல்வித் தரமும் நன்றாக இருக்கும். அதனால், அரசுப் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டினர்.
ஆனால், அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்தாலும் சில மாதங்களுக்குப் பிறகு அதிகமான கட்டணங்களைக் கேட்டு பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுக்கும் என்று மாணவர்கள் பயப்படுகின்றனர். தனியார் பள்ளிகளின் வசூல் வேட்டையால் எழுந்த பிரச்னைகள் பல ஏற்கெனவே வெளிச்சத்திற்கு வந்திருப்பதால் இந்த முறை மாணவர்கள் உஷாராக இருக்கின்றனர்.
ஆசிரியர் பயிற்சியை முடித்தாலும் உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை இருக்கும்போது, தனியார் பள்ளிகளில் சேர்ந்து அதிகமான பணத்தை செலவழிக்க வேண்டுமா, என்பதும் மாணவர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு மட்டும் சில ஆண்டுகளில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எம்.பி.சி., பி.சி., பிரிவு மாணவர்களுக்கு வேலை கிடைக்க, அவர்கள் 45 வயதைக் கடக்க வேண்டும்.
பயிற்சியை முடித்து ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது. ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.
இதுபோன்ற காரணங்களால், ஆசிரியர் பயிற்சியில் சேர, குறிப்பாக தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.