UPDATED : நவ 22, 2010 12:00 AM
ADDED : நவ 22, 2010 12:36 PM
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் டல்லடித்த கேம்பஸ் இன்டர்வியூ முறையிலான வேலை வாய்ப்புகள் வரும் நாட்களில் புதிய உச்சத்தைத் தொடவுள்ளன. இதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ ஆகிய 3 ஐ.டி., நிறுவனங்கள் மட்டுமே வரும் மாதங்களில் ஒரு லட்சம் பேரை வேலைக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக தேர்வு செய்யவுள்ளன. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வேலை வாய்ப்புகள் இந்த முறையில் குவியவுள்ளன.
இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இந்தச் செய்தியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம். இந்த ஐ.டி., நிறுவனங்கள் தவிர எண்ணற்றவரை வேலைக்கு எடுத்துக் கொள்ள ஐ.டி., மேஜர் நிறுவனங்களான அக்செஞ்சர் மற்றும் ஐ.பி.எம்., ஆகியவையும் காத்திருக்கின்றன. டி.சி.எஸ்., நிறுவனம் இந்த ஆண்டு 30 ஆயிரம் பேரை பணிக்கு எடுத்துக் கொள்ள திட்டமிட்டிருந்தது. ஆனால் இது 50 ஆயிரமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. டி.சி.எஸ்., நிறுவனம் பொதுவாக தனக்குத் தேவைப்படுபவர்களில் 70 சதவீதத்தினரை கேம்பஸ் இன்டர்வியூ மூலமாகவே தேர்வு செய்து கொள்வது வழக்கம்.
இது போலவே இன்போசிஸ் நிறுவனம் 30 ஆயிரம் பேர் என்பதை உயர்த்தி இந்த ஆண்டு 40 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவுள்ளது. 61 ஆயிரம் பேரை கேம்பஸ் இன்டர்வியூ முறையில் பரிசோதித்து 27 ஆயிரத்து 500 பேருக்கு இந்த நிறுவனம் வேலை வாய்ப்பைத் தந்துள்ளது. இது போலவே காக்னைசன்ட் நிறுவனமும் தனக்கான ஊழியர்களை அதிக எண்ணிக்கையிலேயே தேர்வு செய்து கொண்டுள்ளது. ஐ.டி., துறையின் மைய அமைப்பான நாஸ்காம், கேம்பஸ் இன்டர்வியூ என்பதை மாணவர்களின் 8வது செமஸ்டரில் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
