கூகுள் நிறுவனத்தில் இந்திய இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு
கூகுள் நிறுவனத்தில் இந்திய இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு
UPDATED : நவ 23, 2010 12:00 AM
ADDED : நவ 23, 2010 11:28 AM
இன்டர்நெட்டுடன் பரிச்சயம் உள்ள அனைவருக்கும் கூகுள் தேடுதல் இணைய தளத்தைப் பற்றி நன்கு தெரியும். சர்வ தேச அளவில் மிகப் பெரிய சர்ச் என்ஜினாக கூகுள் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் கிளவ்டு கம்ப்யூட்டிங் என்ற பிரிவில் தற்போது விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன்.
இணைய தளம் தொடர்புடைய பகிர்வு சேவை முறையான கிளவ்டு கம்ப்யூட்டிங்கில் பல்வேறு தகவல்கள், சாப்ட்வேர் போன்றவற்றை கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் போன்ற உபகரணங்களுக்கு வழங்கப்படுகிறது. உலக அளவில் கூகுளின் கிளவ்டு கம்ப்யூட்டிங்கை கிட்டத்தட்ட 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உபயோகித்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் நிறுவனங்கள் இந்த சேவையை ஏற்கெனவே உபயோகித்து வருகின்றன.
கூகுள் நிறுவனத்தின் கிளவ்டு கம்ப்யூட்டிங் மையம் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மவுண்ட் வியூவிலும், நியூயார்க்கிலும் உள்ளது என்ற போதும், பணி புரியும் இன்ஜினியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்த வரை இந்தியாவின் ஐதராபாத்திலுள்ள மையமே இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய கிளவ்டு கம்ப்யூட்டிங் மையமாகத் திகழ்கிறது.
ஐதராபாத்திலுள்ள கிளவ்டு கம்ப்யூட்டிங் மையத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் இன்ஜினியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது இந்த ஐதராபாத் மையத்தில் மேலும் 300 இன்ஜினியர்களைப் பணியிலமர்த்தி சர்வ தேச அளவில் கிளவ்டு கம்ப்யூட்டிங்கின் சர்வ தேச பிரம்மாண்டமான மையமாக மாற்ற கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்திற்கு பெங்களூருவிலும் ஒரு மையம் உள்ளது என்ற போதும் இந்த மையம் கிளவ்டு கம்ப்யூட்டிங்குடன் மேப், சர்ச், விளம்பரம், செய்தி போன்ற அம்சங்களிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஐதராபாத் மையத்தை முழுக்க முழுக்க கிளவ்டு கம்ப்யூட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.
கிளவ்டு கம்ப்யூட்டிங்கிற்கு இந்தியாவில் மிகவும் தேவை உள்ளது என்பதும், இதனை நடுத்தர மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் உபயோகிப்பதன் மூலம் அவற்றின் சேவையை மேம்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுளின் இந்த இன்ஜினியரிங் பணி வாய்ப்பு செய்தி மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது.
