UPDATED : நவ 23, 2010 12:00 AM
ADDED : நவ 23, 2010 12:34 PM
தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் மாதம் நடக்கிறது. இதை, தனித்தேர்வாக எழுத விரும்புபவர்களுக்கு, 24ம் தேதி(நாளை) முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
ஏற்கனவே தேர்வை எழுதி, தோல்வியடைந்த பாடங்களில் மட்டும் மீண்டும் தேர்வெழுதுபவர்கள், ‘எச்’ வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். நேரடியாக, பிளஸ் 2 தேர்வெழுதுபவர்கள், ‘எச்பி’ வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். ‘எச்’ வகை தேர்வர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 50 ரூபாய் மற்றும் இதரக் கட்டணமாக 35 ரூபாய் சேர்த்து கட்டணமாக செலுத்த வேண்டும்.
‘எச்பி’ வகை தேர்வர்கள், தேர்வுக் கட்டணம் 150 ரூபாய், இதரக் கட்டணங்கள் 35 ரூபாய் மற்றும் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு 2 ரூபாய் என, மொத்தம் 187 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, டிச. 6ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
வருவாய் மாவட்ட வாரியாக, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முகவரி விவரங்களை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள், மதுரை சின்ன சொக்கிக்குளம் ஹக்கீம் அஜ்மல்கான் சாலையில் உள்ள மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கோவை கவுண்டம்பாளையம், தீயணைப்பு சாலையில் உள்ள மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திலும், காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்திலும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில், விண்ணப்பம் அளிக்க வேண்டும். இதேபோல், மற்ற மாவட்டங்களுக்கும் தனித்தனி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
