UPDATED : நவ 29, 2010 12:00 AM
ADDED : நவ 29, 2010 02:42 PM
மதுரை: "மதுரையில் தினமலர் நடத்திய ஏ.ஐ.இ.இ.இ., மாதிரி நுழைவுத் தேர்வு, நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது,' என மாணவர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 முடித்து, பொறியியல் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள், அகில இந்திய அளவிலான ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத் தேர்வை எழுதுவர். இத் தேர்வு குறித்து பல மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. இதில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில், தினமலர் சார்பில் நேற்று, மாதிரித் தேர்வு நடத்தப்பட்டது.
மதுரை கல்லூரியில் நடந்த இத்தேர்வில், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத் தேர்வை போன்றே, தரமான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, காலை 9.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தேர்வு நடந்தது. மழையையும் பொருட்படுத்தாமல், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மட்டுமின்றி பெங்களூரில் இருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர்.
தேர்வு எழுதி முடித்தவுடன் மாணவர்களுக்கு, பிரில்லியன்ட் டுடோரியல்ஸ் சார்பில், பிளஸ் 2 அறிவியல் பாடங்களுக்கான ஒரு மதிப்பெண் வினா வங்கி, அகில இந்திய நுழைவுத் தேர்வு 2010 வினாக்களும், தீர்வுகளும் மற்றும் டாடா மெக்குரோத் ஹில்சின், "முக்கிய சூத்திரங்களும், சமன்பாடுகளும்', ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ஏப்ரலில் விண்ணப்பம்: நுழைவுத் தேர்வுக்கான தொழில்நுட்ப உதவி செய்த மதுரை பிரில்லியன்ட் டுடோரியல்ஸ் மண்டல மேலாளர் பி.சிவகுமார் கூறியதாவது:
அடுத்தாண்டு ஏப்., 24ல் நடைபெறும் தேர்வில் இம்முறை, "ஆன்லைன்' மூலமும் தேர்வு நடக்க உள்ளது. மாநிலத்திற்கு ஐந்தாயிரம் பேர் வீதம் ஒரு லட்சம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் மாணவர்கள் பங்கேற்கலாம். கம்ப்யூட்டர் பயன்பாடு தெரியாதவர்கள் ஆன்லைன் மூலம் எழுதுவதைவிட, எழுத்துத் தேர்வு முறையை தேர்ந்தெடுப்பது நல்லது. தேர்வுக்கான விண்ணப்பங்களை டிச., 15 முதல், மதுரை பேலஸ் ரோட்டில் உள்ள சிண்டிகேட் வங்கியில் பெறலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர், ஏ.ஐ.இ.இ.இ.,யின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வுக்குப் பின், முறையான பயிற்சி எடுத்தால் சாதிக்கலாம், என்றார்.
மாணவர்கள் கருத்து
ஜி.ஆர்.எஸ்.பிரவீன் (ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை): ஏற்கனவே சில தேர்வில் பங்கேற்றுள்ளேன். அவற்றைவிட இத்தேர்வில் எங்கள் பாடசம்பந்தமான வினாக்கள் அதிகம் இருந்தன. எனவே இந்த மாதிரித் தேர்வு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. இத்தேர்வுக்காக சமீபத்தில் தான் தயாரானேன். ஏரோநாட்டிக் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன்.
எப்.மெல்வின் (எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகமலை புதுக்கோட்டை): நான் பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம் என கருதுகிறேன். ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் அளவுக்கு, எனக்கு பயனுள்ளதாக இருந்தது. இத்தேர்வுக்காக ஒரு வாரமாக தயார்படுத்தி வந்தேன்.
எஸ்.ஜோஸ்லின் ஜெபமலர் (மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கே.கே.நகர், மதுரை): முதன்முறையாக இதுபோன்ற தேர்வில் பங்கேற்றுள்ளேன். ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு பற்றி கேள்விப்பட்டுள்ளேன். இப்போதுதான் தெரிந்து கொண்டேன். ஏப்ரலில் நடக்கும் தேர்வில் வெற்றி பெற ஒரு ஐடியா கிடைத்துள்ளது. இதனால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பிளஸ் 1 பாடமும் முக்கியம் என தெரிந்து கொண்டேன்.
பி.விஷாலி (செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, மதுரை): இத்தேர்வுக்கு பயிற்சி எடுக்க வேண்டும் என்று நினைத்தும், போகவில்லை. அதேசமயம் இந்த மாதிரி தேர்வு எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வினாக்கள் அனைத்தும் நுணுக்கமாக, அறிவுபூர்வமாக இருந்தன. இதுபோன்ற தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.
எம். ஷோபனா (எஸ்.பி.எம்., ஜெயின் கல்லூரி, பெங்களூரு): பெங்களூரில் படிக்கிறேன். தீபாவளியின் போது மதுரை வந்திருந்த நான், தினமலர் செய்தியை பார்த்து விண்ணப்பித்து, தற்போது தேர்வுக்காக மதுரை வந்துள்ளேன். நான், ஏ.ஐ.இ.இ.இ., தேர்வுக்காக பயிற்சியில் சேர்ந்திருக்கிறேன். அதற்கான வகுப்பு டிசம்பரில் துவங்க உள்ளது. அதற்கு முன்அனுபவமாக இந்த மாதிரி தேர்வு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அதிக பயனுள்ள இத்தேர்வை, நன்கு எழுதியுள்ளேன்.
