நாகையில் தொடர்கிறது மழை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நாகையில் தொடர்கிறது மழை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
UPDATED : நவ 29, 2010 12:00 AM
ADDED : நவ 29, 2010 02:43 PM
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விளை நிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால் சம்பா பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கனமழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நாகை மாவட்டத்தில் மூன்று நாட்களாக இடைவிடாமல் கொட்டித் தீர்த்த அடைமழை நேற்று காலை முதல் ஓய்ந்திருந்தது. மாலையில் இருந்து, மீண்டும் மழை கொட்டி வருகிறது. இதனால், வேளாங்கண்ணி, நாகை நகர பகுதிகளில் அதிகளவில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாகைசெல்லூர் சாலை வெள்ளநீரால் துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்லூர், ஐவநல்லூர், பாலூர், பெருங்கடம்பனூர் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காவிரி கடைமடை பகுதியாக, இருப்பதால் பாசன வாய்க்கால்கள், ஆறுகளில் அதிக அளவாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் சம்பா பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடல் வழக்கத்திற்கு மாறாக, சீற்றம் குறையாமல் காணப்படுகிறது. இதனால் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழிலைச் சார்ந்த, ஒரு லட்சம் மீனவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கனமழையை தொடர்ந்து,பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
