UPDATED : டிச 03, 2010 12:00 AM
ADDED : டிச 03, 2010 02:22 PM
"ஐடிஸ்கவரி" என்ற கல்வி அமைப்பு, தரமான கல்விக்கான ஒரு அதிரடி மற்றும் விரிவான தீர்வை முன்நிறுத்துவதற்காக, வருடாவருடம் நடக்கும் சர்வதேச மாநாடான "நாளைய பள்ளி" என்ற பெயரிலான மாநாட்டை, இந்த வருடம் டிசம்பர் 7 ஆம் தேதி, டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய பெருநகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தவுள்ளது.
இந்த மாநாட்டில், டாக்டர். அப்துல்கலாம், எம்.ஐ.டி. பேராசிரியர் பீட்டர் செங்கே, அமெரிக்காவின் ஹாவர்டு பல்கலை பேராசிரியர் டேவிட் பெர்கின்ஸ், எழுத்தாளர் குர்சரண் தாஸ் ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டு, எதிர்கால பள்ளிகளுக்கான வலுமிக்க மற்றும் செயல்படுத்த தகுந்த திட்டங்களை, இந்திய மற்றும் சர்வதேச நிலைகளில் வழங்கவுள்ளார்கள்.
பள்ளிகளின் தரமிகுந்த எதிர்கால கல்விக்கான ஒரு திட்டமிடுதலோடு, உலகின் பலதுறை நிபுணர்களின் சீரிய சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளும் இந்த மாநாடு, வெவ்வேறு 4 நகரங்களில் நடந்தாலும், நிகழ்ச்சிகள் இணையம் மற்றும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இணைக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய 4 நகரங்களிலுள்ள புகழ்பெற்ற பள்ளிகளிலிருந்து வரும் 1000 பிரபலங்கள், சர்வதேச கல்வித்துறை நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் ஒரே புள்ளியில் சந்தித்து, எதிர்காலத்தின் சிறந்த பள்ளி கல்விக்கான வடிவம் பற்றி விவாதிக்கும் முன்மாதிரியான நிகழ்ச்சி இது.
கற்பித்தலை மறுவமைப்பு செய்வது, கற்றல், தலைமைத்துவ பயிற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் அதன்மூலமாக சமூகத்தின் மாறிவரும் தேவைகளை எதிர்கொள்வது போன்ற விஷயங்களில் உலக அறிஞர்களின் சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளை ஒருமுகப்படுத்தி பயன்பெறுவதே இம்மாநாட்டின் நோக்கம்" என்று ஐடிஸ்கவரி கல்வி அமைப்பின் சி.இ.ஓ. ஆசிஷ் ராஜ்பால் தெரிவித்தார்.
இம்மாநாட்டில், டாக்டர். அப்துல்கலாம், "அறிவு வல்லரசாக இந்திய வளர்வதற்கு தேவைப்படும் குடிமக்கள்" என்ற தலைப்பிலும், ஹாவர்டு பல்கலை பேராசிரியர். டேவிட் பெர்கின்ஸ், "எதிர்காலத்தின் தாக்கம் மிகுந்த பள்ளிகள்" என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்கள்.
