‘கல்விக் கடன் கோரும் மாணவர்களிடம் பரிவு காட்ட வேண்டும்’
‘கல்விக் கடன் கோரும் மாணவர்களிடம் பரிவு காட்ட வேண்டும்’
UPDATED : டிச 03, 2010 12:00 AM
ADDED : டிச 03, 2010 04:08 PM
சென்னை: ‘கல்வி கடன் கோரும் மாணவர்களின் விண்ணப்பங்களை, பரிவுடன் பரிசீலிக்குமாறு வங்கி மேலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் திவ்யா, பிரீத்தி. இருவரும் சகோதரிகள். ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இருவருக்கும் இடம் கிடைத்தது. குடியாத்தம் தாலுகா செங்குன்றத்தில் உள்ள கனரா வங்கியின் கிளையில், கல்விக் கடன் கோரினர். அதற்கான, விண்ணப்பங்களை தருமாறு கேட்டனர். இதையடுத்து, குடியாத்தம் பகுதியில் உள்ள மற்ற வங்கிகளிடம் இருந்து என்.ஓ.சி., பெற்று சமர்பிக்குமாறு, கனரா வங்கி கிளையின் மேலாளர் கூறினார்.
இதையடுத்து, இந்தியன் வங்கி தவிர மற்ற வங்கிகளில் இருந்து என்.ஓ.சி., பெற்று, அதை கனரா வங்கியில் மாணவியரின் தந்தை சமர்பித்தார். இந்தியன் வங்கி கிளையில், கோழி பண்ணைக்காக கடன் பெற்று, அதில் மூன்று லட்சத்து 57 ஆயிரம் நிலுவையில் உள்ளது. இந்தியன் வங்கியில் மாணவியரின் தந்தை கடன் பெற்றுள்ளதால், கனரா வங்கியில் கடன் பெற மாணவியர்களுக்கு உரிமையில்லை எனக் கூறி, விண்ணப்பங்களை தர கிளை மேலாளர் மறுத்துள்ளார்.
இதையடுத்து, கல்விக் கடனுக்கான விண்ணப்பங்களை வழங்க, கனரா வங்கி கிளை மேலாளருக்கு உத்தரவிடக் கோரி மாணவியர்கள் திவ்யா, பிரீத்தி, மனுத் தாக்கல் செய்தனர். இதை நீதிபதி சுதாகர் விசாரித்தார்.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஜெயபிரதாப், கனரா வங்கி சார்பில் வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜராகினர். நீதிபதி சுதாகர் பிறப்பித்த உத்தரவு: கல்விக் கடன் தொடர்பான அரசின் கொள்கையை, செங்குன்றம் கனரா வங்கி கிளை மேலாளர் தவறாக கருதியுள்ளார். கல்வியின் முக்கியத்துவத்தையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, நவீன கல்விக் கடன் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.
கல்வி கடன் அல்லாமல் வேறு காரணங்களுக்காக வங்கியில் தந்தை கடன் பெற்றிருந்தால், அவரது வாரிசுகளுக்கு கல்விக் கடன் பெற உரிமையில்லை, என இத்திட்டத்தில் எந்த பிரிவும் இல்லை. கல்விக் கடன் வழங்குவதற்கு, கடன் நிலுவை இல்லை என சான்றிதழ் சமர்பிக்க வேண்டும், என வற்புறுத்த தேவையில்லை. மற்ற வங்கிகளில் கடன் பெறவில்லை என்பதை உறுதி செய்வதற்கு, வங்கி தரப்பில் உத்தரவாதம் பெறலாம். ஒரே நபர் வெவ்வேறு வங்கிகளில் கல்விக் கடன் பெற்றுவிடக் கூடாது என்பது தான் நோக்கம்.
வர்த்தக காரணங்களுக்காக தந்தை பெற்ற கடனை, இந்த விஷயத்தில் போட்டு குழப்பக் கூடாது. கல்விக் கடன், வர்த்தக கடன் இரண்டும் வெவ்வேறு விதமானது. நான்கு லட்சம் ரூபாய் வரையிலான கல்விக் கடனுக்கு, உத்தரவாதமே தேவையில்லை. எனவே, இந்தியன் வங்கியில் இருந்து என்.ஓ.சி., பெற்று சமர்பிக்க வேண்டும், என வற்புறுத்தியது தேவையற்றது. இது கல்விக் கடன் திட்டத்தை திசை திருப்புவது போலாகும்.
தகுதியுள்ள ஏழை மாணவர்கள், கல்விக் கடனுக்கான விண்ணப்பங்களை கேட்கும் போதும், விண்ணப்பித்த பிறகும், அதை பரிவுடன் பரிசீலிக்குமாறு, வங்கி மேலாளர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வர்த்தக வங்கிகளின் தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்த மனுவைப் பொறுத்தவரை, மனுதாரர்களுக்கு உடனடியாக செங்குன்றம் கனரா வங்கி கிளை மேலாளர், விண்ணப்பங்களை வழங்கி பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
