UPDATED : ஜன 07, 2011 12:00 AM
ADDED : ஜன 07, 2011 05:35 PM
சென்னை: ராணுவ பயன்பாட்டிற்கான சிறிய அளவிலான ‘பாக்கெட் சைஸ்’ கம்ப்யூட்டர் ஒன்றை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் வடிவமைத்துள்ளது.
போர்க் காலத்திலும், உளவு வேலைகளுக்கும் பல்வேறு வகைகளில் ராணுவ வீரர்களுக்கு பயன்படும், இந்த கம்ப்யூட்டர் அடுத்த சில ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபாரமாக உள்ளது. இதை வரவேற்க வேண்டிய அதே நேரத்தில், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். நாட்டின் மொத்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு மட்டுமே, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதிலும், சமீப ஆண்டுகளாக ராணுவ மேம்பாடு, பாதுகாப்பு ஆராய்ச்சி ஆகிய விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாகவே இந்திய ராணுவத்தில் அதி நவீன போர் விமானங்கள், பீரங்கிகள் மற்றும் இதர உபகரணங்கள், ஆயுதங்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில், போர்க் காலங்களில் மட்டுமல்லாமல், எதிரிகளை உளவுப் பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு ராணுவ பயன்பாடுகளுக்காக ‘பாக்கெட் சைஸ்’ கம்ப்யூட்டர் ஒன்றை டி.ஆர்.டி.ஓ.,வின் ரோபோ தொழில் நுட்பம் மற்றும் செயற்கை அறிவு மையம் வடிவமைத்துள்ளது. இந்த கம்ப்யூட்டர் முதன் முறையாக, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் இந்திய அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டரின் சி.பி.யூ., ராணுவ உடையின் பாக்கெட்டில் பொருந்தும் அளவிற்கு மிக சிறியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தலை கவசத்தின் கண்ணாடியில், கம்ப்யூட்டரின் விழித்திரையும், கையின் ஒரு பகுதியில் ‘கீ போர்டு’ம் பொருத்திக் கொள்ளும் வகையில் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர அதி நவீன காமிரா, தொலை நோக்கி போன்ற சாதனங்களும் கம்ப்யூட்டருடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் எதிரிகளின் நடமாட்டத்தை தெளிவாக கண்காணிக்கலாம். “இந்த கம்ப்யூட்டர் இந்திய ராணுவத்திற்கு பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் ராணுவ வீரர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் சிறப்பாக இருக்கும். இடம், திசை தெரியாமல் திரியும் ராணுவ வீரர்களுக்கு சேட்டிலைட் புகைப்படங்கள் கைகொடுக்கும். தொலை நோக்கி, காமிரா வசதிகள் இரவு நேரங்களிலும் எதிரிகளின் நடமாட்டத்தை அறிந்து செயல்பட உதவும். இந்த கம்ப்யூட்டருடன் தகவல் தொடர்புக்கு வாக்கி டாக்கி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்களின் பேச்சுக்களை யாரும் தெரிந்துக் கொள்ள முடியாத வகையில், மொழிப் பெயர்த்து, ரகசிய வார்த்தைகள் மூலம் ராணுவ தலைமையக அதிகாரிகள் பல்வேறு விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடியும். அடுத்த சில ஆண்டுகளில் இந்திய ராணுவத்திற்கு இந்த ‘பாக்கெட் சைஸ்’ கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது,” என்கின்றனர் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறை அதிகாரிகள்.
