UPDATED : ஆக 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பொள்ளாச்சி: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக முடிந்துள்ளது. இதனால், பிளஸ் 2 மறுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்காததால் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிடப்பட்டது. இதையடுத்து, கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை மும்முரமாக நடந்தது.
பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே மாணவர்கள் சேர்க்கை முழுமையாக முடிந்து விட்டது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், ‘கவுன்சிலிங்’ மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவிகளுக்கு ஜூன் மாதம் உடனடி மறுத்தேர்வு நடத்தப்பட்டது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, மறுத்தேர்வு மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு சேர்க்கை நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.
மறுதேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது; அதை தொடர்ந்து, தற்போது மறுகூட்டல், நகல் பெற விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில், சேர்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக முடிந்துள்ளதால், மறுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே, மறுதேர்வு மாணவர்களுக்கு சொற்ப இடங்கள் ஒதுங்கியுள்ளன. மேலும், இக்கல்லூரிகளிலும் பி.காம்., பி.எஸ்.சி., கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளதால், மறுதேர்வு மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘தேர்வில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஓர் ஆண்டு கல்வி பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் உடனடி மறுதேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், மறுதேர்வு நடத்தி தேர்வு முடிவுகள் வெளியாவதற்குள், கல்லூரிகள் சேர்க்கையை முடித்து பாடங்களும் நடத்தி விடுகின்றன. இதற்கு கல்வித்துறையும், பல்கலைக் கழகங்களும் தகுந்த நடவடிக்கை எடுத்து மறுதேர்வு மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
கல்லூரி முதல்வர்கள் கூறுகையில், ‘தேர்வு முடிவுகள் வெளியானவுடன் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. இருப்பினும், மறுதேர்வு மாணவர்களுக்கு 15 இடங்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களும், மறுதேர்வு முடிவுகள் வெளியானவுடன் நிரப்பப்படும்’ என்றனர்.