8ம் தேதி இரவு 8 மணிக்கு விளக்கை அணையுங்கள்: மாணவிகள் பிரசாரம்
8ம் தேதி இரவு 8 மணிக்கு விளக்கை அணையுங்கள்: மாணவிகள் பிரசாரம்
UPDATED : ஆக 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
‘அதற்காக, இந்த ஆண்டு 8ம் மாதம் (ஆகஸ்ட்), 8ம் தேதி, 8 மணிக்கு, எட்டு நிமிடத்திற்கு விளக்கை அணையுங்கள்...’ என்று பாட்டுப் பாடியபடியே கறுப்பு, வெள்ளை உடையணிந்து கையில் குடையை வைத்துக் கொண்டு சென்னை நகரை பரபரப்புடன் வலம் வந்தனர் கல்லூரி மாணவிகள்.
எக்ஸ்னேராவும், தி.நகர் ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் மகளிர் கல்லூரி மாணவியரும் இணைந்து, உலகம் வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தி.நகர் நடேசன் பூங்காவில் ஆகஸ்ட் 5ம் தேதி கூடினர். 80 மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாணவிகள் அனைவரும் தங்கள் கைகளில் வைத்திருந்த குடையை விரித்து அசைத்து சுற்றி சுற்றி எட்டு முறை சுழற்றினர். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு குடையை மடக்கி வைத்துவிட்டு, சுற்றுச்சூழல் செய்தியை கூறினர்.
அவர்கள் கூறிய செய்தியின் விவரம்:
‘உலகம் வெப்பமயமாதல்’ எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘88888 - விளக்கை அணையுங்கள்’ எனும் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதாவது, இந்த நூற்றாண்டின் எட்டாம் ஆண்டான 2008ம் ஆண்டில் எட்டாவது மாதத்தில் (ஆகஸ்ட்டில்), எட்டாம் தேதி (நாளை மறுதினம்) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்களுக்கு மின்விளக்கை அணைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இதன் மூலம் உலகம் வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.
கல்லூரி முதல்வர் தேவகி பேசுகையில், “மாணவிகள் இந்த பிரசாரத்தை மேற்கொள்வதோடு, தாங்கள் குடியிருக்கும் பகுதியிலும் தெரிந்தவர்களிடமும் இது குறித்து விளக்கி, எட்டாம் தேதி எட்டு நிமிடங்கள் விளக்கை அணைக்க வலியுறுத்தவேண்டும்,” என்றார்.
பின்னர் மாணவிகள் தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பிரசாரம் செய்தனர்.