10 பேருக்கு ‘மகாகவி பாரதி ஐந்தமிழ் விருது’: பாரதியார் பல்கலை
10 பேருக்கு ‘மகாகவி பாரதி ஐந்தமிழ் விருது’: பாரதியார் பல்கலை
UPDATED : ஆக 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: பாரதியார் பல்கலை சார்பில், தமிழ் அறிஞர்கள் 10 பேருக்கு, ‘மகாகவி பாரதி ஐந்தமிழ் விருது’ வழங்கப்பட உள்ளது; செப்டம்பரில் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குகிறார்.
தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டுக்கும் கலை, இலக்கியம் வாயிலாக தொடர்ந்து பணியாற்றி வரும் அறிஞர்களை பாராட்டும் வகையில் கடந்த ஆண்டு, ‘பாரதியார் தமிழ் செம்மல்’ என்ற விருதை முதல்வர் கருணாநிதிக்கு, கோவை பாரதியார் பல்கலை வழங்கியது.
இதுபோல் இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஊடகத்தமிழ் என்ற ஐந்து தமிழ்த்துறைகளில் தொடர்ந்து பணியாற்றி வரும் அறிஞர்களைப் பாராட்டி கவுரவிக்க, இந்த ஆண்டு முதல், ‘மகாகவி பாரதி ஐந்தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.
இந்த விருது மகாகவி பாரதி இயல்தமிழ் விருது, மகாகவி பாரதி இசைத்தமிழ் விருது, மகாகவி பாரதி நாடகத்தமிழ் விருது, மகாகவி பாரதி அறிவியல் தமிழ் விருது, மகாகவி பாரதி ஊடகத்தமிழ் விருது என்ற பெயரில் வழங்கப்படும். 40 வயது மேற்பட்டவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாகவும், 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இளைஞர்களுக்கான விருதாகவும், மொத்தம் 10 பேருக்கு, ‘மகாகவி பாரதி ஐந்தமிழ் விருது’ வழங்கப்படும்.
விருதுடன் பொற்கிழி, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கேடயம், பாராட்டுப்பத்திரம் வழங்கப்படும். இந்த விருதுக்காக, 309 சாதனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்களுடன் படைப்புகள் பெறப்பட்டுள்ளன.
படைப்புகளை ஆய்வு செய்து வெற்றியாளர்களை தேர்வு செய்யும் வல்லுனர் குழுவின் கலந்தாய்வு கூட்டம், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் தலைமையில் பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூடத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி நடந்தது.
இக்கூட்டத்தில் விருதுக்குழுவின் தலைவரும் துணைவேந்தருமான திருவாசகம், வல்லுனர் குழு உறுப்பினர்கள் சிற்பி பாலசுப்பிரமணியம், மதுரை சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி முதல்வர் லட்சுமி போத்வால், திரைப்பட இயக்குனர் அகத்தியன் ஆகியோர் பங்கேற்றனர்.
விருது குறித்த இரண்டாவது கலந்தாய்வு கூட்டம், செப்., 5ம் தேதி காலை 10.30க்கு பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டத்தில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் விருதுக்கான வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த விருதுகளை செப்டம்பர் இறுதியில் முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.