முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் அனுமதி
முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் அனுமதி
UPDATED : ஆக 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை, ஆந்திராவில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஆந்திரா கல்வி நிறுவனங்களில், முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, ஆந்திர ஐகோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.
இந்த வழக்கில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், அரசு தரப்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத அடிப்படையில் இடஒதுக்கீட்டின் படி, கவுன்சிலிங்கை வழக்கம் போல தொடர்வதற்கு அனுமதி அளித்தது. ஆனால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி ஆந்திர அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ‘அரசின் உத்தவிரவில் எவ்விதமான சட்டவிரோத செயல்பாடும் இல்லை.
கவுன்சிலிங் நடத்தப்பட்டதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படாவிட்டால், ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கையும் குளறுபடியாகிவிடும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், ஜே.எம்.பஞ்சால் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தனர். அதேநேரம், ஆந்திர ஐகோர்ட் டின் இறுதி தீர்ப்புக்கு மாநில அரசு கட்டுப்பட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தனர்.